உத்தரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் கொடுத்திருந்த பெண் கார் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திட்டமிட்ட சதியா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில், வேலை கேட்டு சென்ற போது எம்எல்ஏ குல்தீப் தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்திருந்தார். 

இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆகையால், நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அப்பெண் மற்றும் அவரது தந்தை தீக்குளிக்க முயற்சித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் தந்தை சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

இந்நிலையில் நேற்று அந்த பெண், தனது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எதிரெ வந்த லாரி காரின் மீது மோதியது. இந்த விபத்தில் அவரது தாய், உறவினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் கூறியதால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.