Union Minister Venkaiah Naidu condemned the security guards

நாட்டில் பசு பாதுகாவலர்களால் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படுவது காட்டுமிராண்டித்தனமானது, அதே சமயம், இந்த செயலை மதத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடித்துக் கொலை

 ஜார்கண்ட் மாநிலம், ராம்கார்க்கை சேர்ந்த அலிமுதீன் அஸ்கார்என்பவர், நேற்றுமுன்தினம் ஒரு வாகனத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக கூறப்படுகிறது. இதை அறிந்த ஒரு கும்பல், அந்த வாகனத்தை வழிமறித்து, தாக்கியது. வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தினர்.

போலீசார் விரைந்து சென்று கும்பலிடம் இருந்து இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால், ராம்கார்க் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

காட்டுமிராண்டித்தனம்

இது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், “ பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் அப்பாவி மக்களை கொல்வதை நான் கண்டிக்கிறேன்.

பிரதமர் மோடியும், இந்தபோன்ற சம்பவங்கள் குறித்து 2-வது முறையாக கண்டித்துள்ளார். நாட்டில் பல இடங்களில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களும், அட்டூழியங்களும் நடக்கின்றன.

ஆனால், இந்த சம்பவங்களை மதத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க கூடாது’’ என்று தெரிவித்தார்.