- Home
- இந்தியா
- பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படவில்லை என உறுதியான நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி மீது அபாண்டமாக பழி சுமத்திய சந்திரபாபு நாயுடும், பவன் கல்யாண் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 2 அல்லது 3 நாள் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு இலவச பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்கள் கூடுதல் லட்டுகளை பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.
திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு
இதற்கிடையே திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வ சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பரபரப்பு குற்றம்சாட்டினார்கள். 2019 முதல் 2024 வரை ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி கோயிலின் புனிதத்தை கெடுத்து விட்டதாக குற்றம்சாட்டினார்கள். இந்த விவாகரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.
சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த நிலையில், சிபிஐ தனது இறுதி குற்றப்பத்திரிகையை நெல்லூரில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதாவது திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு அல்லது பன்றி கொழுப்பு கலக்கப்படவில்லை. நெய்க்குப் பதிலாக செயற்கை பொருட்களைப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
மாட்டுக் கொழுப்பு அல்லது பன்றி கொழுப்பு ஆதாரம் இல்லை
2019 முதல் 2024 வரை லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு அல்லது பன்றி கொழுப்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. நெய்க்குப் பதிலாக தாவர எண்ணெய்கள் மற்றும் ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் எஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை வேதியியல் ரீதியாக பால் பொருட்களின் பண்புகளைப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை என்பதால் இதை வைத்து எளிதாக மோசடி செய்யப்பட்டுள்ளது.
எப்படி மோசடி நடந்தது?
நெய்யின் தூய்மையைக் கண்டறியும் சோதனையை ஏமாற்ற, பாம் ஆயில் மற்றும் பாமோலின் எண்ணெய்களுடன் அசிட்டிக் ஆசிட் எஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளது. பசு நெய்யின் நிறத்தைக் கொண்டுவர பீட்டா கரோட்டின் மற்றும் மணத்திற்காகச் செயற்கை சுவையூட்டிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
உத்தராகண்டில் உள்ள 'போலே பாபா ஆர்கானிக் டெய்ரி' என்ற நிறுவனம் 2019-2024 காலக்கட்டத்தில் ஒரு சொட்டு பால் அல்லது வெண்ணெய் கூட கொள்முதல் செய்யாமல் சுமார் 250 கோடி நெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த வழக்கில் 36 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் பொது மேலாளர் ஆர்.எஸ்.எஸ்.வி.ஆர் சுப்பிரமணியம், போலே பாபா ஆர்கானிக் டெய்ரி நிறுவனத்தின் இயக்குநர்கள் போமில் மற்றும் விபின் ஜெயின் ஆகியோர் இதில் மிக முக்கியமானவர்கள்.
திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படவில்லை என உறுதியான நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி மீது அபாண்டமாக பழி சுமத்திய சந்திரபாபு நாயுடும், பவன் கல்யாண் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

