தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த சி.ஜே. ராயை மீட்டு சிகிச்சைக்காக எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கான்ஃபிடன்ட் குரூப் (Confident Group) நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ரிச்மண்ட் வட்டம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் உள்ளேயே சி.ஜே. ராய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூருவின் கான்ஃபிடன்ட் குரூப் அலுவலகத்தில் ஐ.டி அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் ஐ.டி சோதனைக்கு பயந்து சி.ஜே.ராய் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஐ.டி அதிகாரிகள் கண் முன்னே உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பிரபல தொழில் அதிபர்

பிரபல தொழில் அதிபரான சி.ஜே.ராய், 2006ம் ஆண்டு கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தைத் தொடங்கினார். அவரது நிறுவனம் ரியல் எஸ்டேட் மட்டுமின்றி, சுற்றுலா, விமான‌ போக்குவரத்து, கல்வி மற்றும் சர்வதேச வர்த்தகத்திலும் கொடிகட்டி பறக்கிறது. பெங்களூருவில் ரியல் எஸ்டேட்டில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்த இவர் வெளிநாடுகளிலும் தனது தொழிலை விரிவுபடுத்தி இருந்தார்.

கார்களின் பிரியர்; இன்ஸ்டாகிராமில் பிஸி

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சி.ஜே. ராய் பெங்களூருவில் தான் பிறந்து வளர்ந்தார். சி.ஜே. ராய்க்கு கார்கள் என்றால் கொள்ளை பிரியம். ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி என விலை உயர்ந்த கார்களை வாங்கி குவித்துள்ளார். பிஸியான தொழில் அதிபராக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்புடன் வலம் வந்த இவர் தன்னிடம் இருக்கும் காரின் சிறப்புகள், கார்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பேசி ரீல்ஸ் வெளியிட்டு வந்தார்.

சிறந்த சமூக சேவகர்

சிறந்த சமூக சேவகராகவும் விளங்கிய சி.ஜே. ராய் கேரள வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளார். சி.ஜே. ராயின் மறைவு தொழில் துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.