பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனை.. வரவேற்ற மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் !!
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனை, மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று,புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். இங்கிலாந்து பிரதமருக்கு பிரதமர் நரேந்திர மோடி அங்கு சம்பிரதாய வரவேற்பு அளித்தார். குடியரசுத் தலைவர் மாளிகை வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘அருமையான வரவேற்புக்கு நன்றி..’ என்று கூறினார். குடியரசுத் தலைவர் மாளிகை வந்த இங்கிலாந்து பிரதமருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
‘இந்தியா-இங்கிலாந்து நட்புறவில் இது அற்புதமான நேரம். ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான மிகவும் நல்ல தருணம் இது. இப்போது இருப்பது போல, இதற்கு முன் எப்போதும் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே உறவுகள் இவ்வளவு வலுவாகவும் சிறப்பாகவும் இருந்ததில்லை என நான் நினைக்கிறேன்’ என்று ஜான்சன் தெரிவித்தார். ‘பிரதம மந்திரிக்கு மற்றும் சர்க்காரின் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனே டெல்லிக்கு வரவேற்கிறோம்' என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ட்விட்டரில் பதிவிட்டார்.
போரிஸ் ஜான்சனின் வருகையையொட்டி, இந்தியாவும் பிரிட்டனும் 1 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமான மதிப்புள்ள வர்த்தகத் திட்டங்களிலும் ஏற்றுமதி திட்டங்களிலும் புதிய முதலீடுகளைச் செய்யவிருக்கின்றன. மென்பொருள் தொடங்கி, சுகாதாரம் வரை பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் செய்யும் முதலீடுகள் மூலம் பிரிட்டனில் 11,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக நேற்று குஜராத் வந்துசேர்ந்த போரிஸ் ஜான்சனை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத் ஆகியோர் வரவேற்றனர். குஜராத்தில் காந்தியின் சாபர்மதி ஆசிரமம், கவுதம் அதானியின் அதானி குழுமத் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற போரிஸ் ஜான்சன், நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார்.