பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீண்டும் வலியுறுத்தல்!
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் தொடர்புடையதாகவே இருக்கிறது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் எழுதிய கடித்தத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க கோரும் கோரிக்கை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் தொடர்புடையதாகவே இருக்கிறது என பதிவிட்டுள்ளார். அதாவது பயங்கரவாத செயல்களுக்கு அந்நாடு இன்றளவும் துணை போவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வரக்க்கோரி கடந்த 2017ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும், நமது அண்டை நாடு இந்தியாவின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் ஆதாரமாக இருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
“பாகிஸ்தானின் கொடூரமான பயங்கரவாதச் செயல்களுக்கு நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், அந்நாட்டை மற்ற நாடுகளை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானுடன் வழக்கம் போல் நாம் வணிகத்தைத் தொடர்கிறோம்; அவற்றை பயங்கரவாத நாடு என்று நாம் அறிவிக்கவில்லை. இதுபோன்ற வேறுபாடுகள் உள்ளன. எனவே, இந்த கொடூரமான தாக்குதல்கள் தொடர்கின்றன.” என அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த ராஜீவ் சந்திரசேகர், “நம்மில் பெரும்பாலோர் அமர்நாத் யாத்திரை தாக்குதலைக் கண்டித்து இரங்கலைத் தெரிவித்துள்ளோம். ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளை விட்டுவிட்டு நமது மக்களின் வாழ்க்கையையும் நமது நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நான் இப்போது உணர்கிறேன்.” எனவும் தெரிவித்திருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் இரண்டு முக்கிய வழக்குகள்!
“பாகிஸ்தானின் நடவடிக்கைகள் என்னை போன்றே, நமது நாட்டு மக்களை போன்றே உங்களுக்கும் வலியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று நான் நம்புகிறேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நாம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்தியாவை ரத்தக்காடாக மாற்றும் அண்டை நாடு மீதான ஒரு நிலைப்பாட்டை எடுக்க, இந்திய மக்களின் பிரதிநிதிகளாக நாம் ஒன்று கூடவில்லை. நாடாளுமன்றமும், அதன் உறுப்பினர்களும் பாகிஸ்தானைக் கண்டிப்பதை விட அதிகமாக ஏதாவது செய்ய வேண்டும் என இந்திய மக்கள் எதிர்பார்க்க்கிறார்கள்.” எனவும் அந்த கடிதத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை பிரகடனம் செய்வது தொடர்பான தனிநபர் மசோதாவை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கொண்டு வந்தார். ஆனால், அது தொடர்பாக, எந்த சட்டமும் தேவையில்லை என்றும், அரசாங்கத்திற்கு போதுமான நிர்வாக அதிகாரங்கள் உள்ளன என்றும் உறுதியளித்த பின்னர் அதை அவர் திரும்பப்பெற்றார். அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக, 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வரக் கோரி அதன் உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கக் கோரும் முகாந்திரம் இருப்பதாக தனது பழைய கடிதத்தை சுட்டிக்காட்டி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதற்கிடையே மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.