உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் இரண்டு முக்கிய வழக்குகள்!
உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரது இரண்டு முக்கிய வழக்குகள் இன்று விசாரணைக்கு வரவுள்ளது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவரது நீதிமன்ற காவல் வருகிற 26ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் சட்டவிரோத கைது ஆகிய இரு மனுக்களின் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
இதனால், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை 3ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது என உத்தரவிட்டார். ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் 3ஆவது நீதிபதி தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். முன்னதாக, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கோரி அமலாக்கத்துறை சார்பிலும் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
ராகுல் காந்தி வழக்கு
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மணிப்பூர் வீடியோ: தீக்கிரையாக்கப்பட்ட முக்கிய குற்றவாளியின் வீடு!
இது தொடர்பாக ராகுல் காந்தி நடத்திய சட்டப்போராட்டத்தின் முடிவில், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல், ராகுல் காந்தி அவதூறு வழக்கில் புகார்தாரரான புர்னேஷ் மோடி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.