ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி: மறுபரிசீலனை செய்ய மத்திய அமைச்சர் கோரிக்கை!
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28 சதவீதம் வரியை மறுபரிசீலனை செய்யுமாறு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்

டெல்லியில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க கவுன்சில் முடிவு செய்தது. இதற்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28 சதவீதம் வரியை மறுபரிசீலனை செய்யுமாறு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மீதான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை பரிசீலிக்க ஜிஎஸ்டி கவுன்சிலிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தும் முக்கிய அமைச்சகமாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இருக்கும் நிலையில், “நிலையான, அனுமதிக்கப்பட்ட ஆன்லைன் விளையாட்டு கட்டமைப்பை உருவாக்கும் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கிறோம்; எனவே நாங்கள் அதைச் செய்துவிட்டு மீண்டும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்குச் சென்று, புதிய வரி விதிப்பை பரிசீலிக்கக் கோர வாய்ப்புள்ளது.” என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கூட்டாட்சி அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில் இந்த பிரச்சினையில் பணியாற்றி வருவதாகவும், ஆன்லைன் கேமிங்கிற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பானது கடந்த ஜனவரி மாதத்திலேயே தொடங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “ஜிஎஸ்டி கவுன்சில் என்பது இந்திய அரசு அல்ல. கவுன்சில் அனைத்து மாநில அரசுகளாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இது ஒரு கூட்டாட்சி அமைப்பு. மாநில அரசுகளும், நிதி அமைச்சர்களும் ஒன்றிணைந்து ஜிஎஸ்டி கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இது அவர்களின் மூன்று வருட உழைப்பின் விளைவு. கண்டுபிடிப்புகளுடன் நாங்கள் குழப்பமடையக்கூடும் என்றாலும், ஜனவரி 2023 இல் தொடங்கப்பட்ட ஆன்லைன் கேமிங்கிற்கான கட்டமைப்பை உருவாக்கும் செயல்முறையை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும்.” என்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒழுங்குமுறை கட்டமைப்பின் விவாதங்கள் தொடங்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு ஆன்லைன் கேமிங் துறையை பாதித்திருந்தாலும், இந்த பிரச்சினையில் ஒரு ஒழுங்குமுறையை உருவாக்குவதில் அவசர கதியில் செயல்படுவதை விட, தவறுகளை கண்டறிந்து மெதுவாகச் செயல்படுவது விவேகமானது என்றும் தெரிவித்தார்.
கண்ணீர் விட்டு கலங்கி நின்ற கார்கே: உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் அஞ்சலி!
“டிஜிட்டல் தளத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான கண்ணோட்டத்தை மனதில் வைத்து செயல்படுவதில் பிரதமர் மோடி தெளிவாக இருக்கிறார். நாங்களும் அதனை நம்புகிறோம். எனவே சட்டங்கள், விதிகள் அனைத்தும் பங்குதாரர்களுடன் விரிவான ஆழமான கலந்தாலோசனைக்கு பிறகே மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆன்லைன் கேமிங் விதிகள் மூன்றரை மாதங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. அரசாங்கம் ஆரம்பித்ததும், அதில் நாங்கள் முடித்ததும் முற்றிலும் வேறுபட்டது. எனவே, விரைவாகச் செய்வதை விட, சரியாகச் செய்வது நல்லது.” என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
மொபைல் பிரீமியர் லீக் (எம்பிஎல்), நசரா டெக்னாலஜிஸ், கேம்ஸ்க்ராஃப்ட் டெக்னாலஜிஸ் மற்றும் வின்ஸோ கேம்ஸ் உள்ளிட்ட சுமார் 130 ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்கள், புதிய வரிவிதிப்பை மாற்ற வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. மேலும், இந்த முடிவு சட்டவிரோத தளங்களுக்கு மட்டுமே பயனளிக்கும். ஆன்லைன் கேமிங் துறையில் ஆயிரக்கணக்கான வேலையிழப்புகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் கேமிங்களுக்கான 28 சதவீதம் வரி விதிப்பு, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஆன்லைன் கேமிங்கில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்திய இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கடிதத்தில், இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை 20 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவன மதிப்பீட்டைக் கொண்டுள்ளதாகவும், 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருடாந்திர வருவாயை அந்த துறை ஈட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.