மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு சோனியா, ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 79. புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று கேரளா திரும்பிய அவரது உடல்நிலை மோசமானதால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உம்மன் சாண்டி காலமானார். இரண்டு முறை கேரள மாநிலத்தின் முதல்வராக இருந்த நாட்டின் மூத்த அரசியல் தலைவரான உம்மன் சாண்டியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரு இந்திரா நகரில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் டி.ஜான் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. 

Scroll to load tweet…

இந்த நிலையில், மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு சோனியா, ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெங்களூருவில் இருக்கும் நிலையில், உம்மன் சாண்டியின் மறைவை அறிந்து அவரது உடல் வைக்கப்பட்டுள்ள இல்லத்துக்கு அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, உம்மன் சாண்டியின் உடலை பார்த்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்ணீர் விட்டு கலங்கி நின்றார். ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் உம்மன் சாண்டியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதன்பிறகு பேசிய ராகுல் காந்தி, “கேரளத்தின் உணர்வையும், இந்தியாவின் உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர் சாண்டி. அவர் கேரள மக்களின் உண்மையான தலைவராக இருந்தார். நாம் அனைவரும் அவரை இழந்துவிட்டோம். அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த மற்றும் கவனித்துக் கொள்ளும் அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

YouTube video player

முன்னதாக, உம்மன் சாண்டி மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அம்மாநில அரசு இன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் இருந்து இன்று மதியம் கேரள மாநிலம் கொண்டு செல்லப்படும் உம்மன் சாண்டியின் உடலுக்கு நாளை மறுநாள் இறுதி சடங்கு நடைபெறும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

உம்மன் சாண்டி உடல் 20ஆம் தேதி நல்லடக்கம்: கேரள அரசு பொது விடுமுறை அறிவிப்பு!