டிஜிட்டல் முறையை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் காங்கிரஸ்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தாக்கு!
டிஜிட்டல் முறையை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி கொள்ளையடிப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்து
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், க்ரவுட் ஃபண்டிங் எனப்படும் பொது நிதி திரட்டும் பிரசாரமான தேசத்திற்கு நன்கொடை எனும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. அக்கட்சியின் 138ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளை அயோத்தி பயணம்: புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
இந்த நிலையில், டிஜிட்டல் முறையை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி கொள்ளையடிப்பதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நம்பிக்கையில்லா வம்சத்தின் உண்மை இதுதான். பிரதமர் மோடி மற்றும் அவரது கொள்கைகளை பற்றி எப்போதும் பொய்யாக விமர்சிப்பது. பாராளுமன்றத்தில் டிஜிட்டல் பணம் செலுத்துவதை எதிர்ப்பது. ஆனால், டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பயன்படுத்தி நன்கொடை எனும் பெயரில் கொள்ளையடித்தல். இந்த கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நரேந்திர மோடிக்கு எதிராக தேர்தலில் பயன்படுத்தி தோல்வி அடைவது.” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, வாய்ப்புகள் நிறைந்த இந்தியாவை உருவாக்குவதில் கட்சிக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு தேசத்திற்கு நன்கொடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பொது நிதி திரட்டுதல் திட்டத்தை வம்சத்துக்கான நன்கொடை என பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.