Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி நாளை அயோத்தி பயணம்: புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு பிரதமர் மோடி நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
 

PM Modi to visit ayodhya tomorrow to inaugurate multiple development projects smp
Author
First Published Dec 29, 2023, 7:35 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு பிரதமர் மோடி நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார். காலை 11:15 மணியளவில், மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கும் பிரதமர், புதிய அமிர்த  பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை  கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மேலும் பல ரயில்வே திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மதியம் 12:15 மணியளவில், புதிதாகக் கட்டப்பட்ட அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.

 மதியம் 1 மணியளவில், பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார், அங்கு அவர் நாட்டுக்கு ரூ.15,700 கோடிக்கும் அதிகமான மதிப்பில்  பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் உத்தரப் பிரதேசம் முழுவதும் சுமார் ரூ.4600 கோடி மதிப்புள்ள திட்டங்கள் இதில் அடங்கும்.

அயோத்தியில் நவீன உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது, இணைப்பை மேம்படுத்துவது மற்றும் அதன் குடிமை வசதிகளை மறுசீரமைப்பது, அதேநேரத்தில் நகரத்தின் வளமான வரலாறு மற்றும் பாரம்பரியத்திற்கு இணங்குவது, ஆகியவை பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும். இதை  நிறைவேற்றும் வகையில், புதிய விமான நிலையம், புதிய மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையம், புதிதாக மறுசீரமைக்கப்பட்ட, அகலப்படுத்தப்பட்ட மற்றும் அழகுபடுத்தப்பட்ட சாலைகள் மற்றும் பிற குடிமை உள்கட்டமைப்புகள் நகரத்தில் திறக்கப்பட்டு வருகின்றன. மேலும், அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடிமை வசதிகளை அழகுபடுத்துவதற்கும் மறுசீரமைப்பதற்கும் பங்களிக்கும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

அயோத்தி விமான நிலையம்


ரூ.1450 கோடி செலவில் அதிநவீன விமான நிலையத்தின் முதல் கட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முனைய கட்டிடம் 6500 சதுர மீட்டர் பரப்பளவில், ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் இருக்கும். முனைய கட்டிடத்தின் முகப்பு விரைவில் திறக்கப்படவுள்ள அயோத்தியின் ஸ்ரீ ராமர் கோயிலின் கட்டிடக்கலையைச் சித்தரிக்கும்  வகையில் உள்ளது. கட்டிடத்தின் உட்புறங்கள் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் உள்ளூர் கலை, ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையம் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்துவதுடன், சுற்றுலா, வணிக நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி தாம் ரயில் நிலையம்


ரூ.240 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தின் முதல் கட்டம், அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று மாடிகள் கொண்ட நவீன ரயில் நிலைய கட்டிடத்தில் மின்தூக்கி, நகர்படிகள், உணவகங்கள், பூஜைக்குத்  தேவைகளுக்கான கடைகள், குழந்தைகள் பராமரிப்பு அறைகள், காத்திருப்பு அறைகள் என அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. இந்த நிலையக் கட்டிடம் 'அனைவரும் அணுகக்கூடியது' மற்றும் 'ஐ.ஜி.பி.சி சான்றளிக்கப்பட்ட பசுமை நிலைய கட்டிடம்' ஆகும்.

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.... விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

அமிர்த பாரத் ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் பிற ரயில் திட்டங்கள்


அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் புதிய வகை அமிர்த  பாரத் என்ற அதி விரைவு  பயணிகள் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். இது, குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட எல்.ஹெச்.பி புஷ் புல் ரயில் ஆகும். இது, ரயில் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்குகிறது. ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மேலும், பிராந்தியத்தில் ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.2300 கோடி மதிப்புள்ள மூன்று ரயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

அயோத்தியில் மேம்பட்ட குடிமை உள்கட்டமைப்பு


ஸ்ரீ ராமர்  கோயிலுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக, அயோத்தியில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட, அகலப்படுத்தப்பட்ட மற்றும் அழகுபடுத்தப்பட்ட ராம்பாத், பக்திபாத், தரம்பாத் மற்றும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி பாதை ஆகிய நான்கு சாலைகளை பிரதமர் திறந்து வைப்பார். குடிமை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும், அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பொது இடங்களை அழகுபடுத்தும் பல திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

அயோத்தியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்


அயோத்தியில் குடிமை வசதிகளை மறுசீரமைக்கவும்,  அதே நேரத்தில் நகரத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வலுப்படுத்தவும் உதவும் புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.  இதில் அயோத்தியில் உள்ள நான்கு வரலாற்று நுழைவாயில்களைப் பாதுகாத்தல் மற்றும் அழகுபடுத்துதல் ஆகியவை அடங்கும். அயோத்தியில் ரூ.2,180 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டு வரும் பசுமை குடியிருப்புப் பகுதி  மற்றும் சுமார் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்படும் வசிஷ்ட குஞ்ச் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றுக்கும்  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios