சபரிமலை ஐயப்பன் கோவிலில் போலீஸ் கெடுபிடி நீடிக்கும் நிலையில் நேற்று இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை நிலக்கல்லில் போலீசாரால்  தடுத்து நிறுத்தப்பட்டார். அதன் பின்னர் வாகனத்தில் அனுமதிக்க மறுத்துவிட்டதால், அவருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மத்திய அமைச்சர் ஒருவரை எஸ்.பி. யதீஷ் சந்திரா தகாத வார்த்தையால் வசைப்பாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. சபரிமலையில் நடைபெறும் போராட்டங்கள் வன்முறையாக மாறாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை செல்லும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்றவர்களின் கார்கள் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. 

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இருந்து ஆதரவாளர்களுடன் இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்டார். நேற்று  காலை அவர்கள் நிலக்கல்லை அடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்பி யதீஷ்சந்திரா தலைமையிலான போலீசார் மத்திய அமைச்சரின் வாகனத்தை தடுத்து  நிறுத்தினர். தடை உத்தரவு அமலில் இருப்பதால் கூட்டமாக செல்ல முடியாது. அமைச்சர் மட்டும் செல்லலாம் என கூறினர். 

இதனால் அமைச்சருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அரசு பஸ்களை அனுமதிக்கும்போது அமைச்சரின்  வாகனத்தை ஏன் அனுமதிக்க கூடாது என அமைச்சருடன் வந்தவர்கள் வாக்குவாதம் செய்தனர். அப்போது எஸ்.பி. யதீஷ் சந்திரா மத்திய அமைச்சரை கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமைச்சரும் அவருடன் வந்தவர்களும் அரசு பஸ்சில் பம்பைக்கு புறப்பட்டு சென்றனர்.

சபரிமலையில் தரிசனத்திற்கு பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் சபரிமலைக்கு பெருமளவு பக்தர்கள் வருகை தருவதை தடுக்கவே  சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என புகார் கூறியுள்ளார். 

எஸ்பி என்னிடம் வாகனங்களை அனுமதிக்க நீங்கள் பொறுப்பேற்க முடியுமா? என்று கேட்கிறார். இந்த கேள்வியை கேரள முதல்வரிடம் கேட்க முடியுமா? என கேள்வி எழுப்பிள்ளார். மேலும் பக்தர்களுக்கு எந்த பிரச்னையும் செய்யாமல் அவர்கள் தரிசனத்திற்கு  செல்ல அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கு அரசியல் செய்ய விரும்பவில்லை. கேரள அரசும், போலீசும் சபரிமலை விஷயத்தை கையாள தெரியாமல் செயல்படுகிறது என்று தெரிவித்தார்.