காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லை: பியூஷ் கோயல் காட்டம்!
காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடானது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காட்டம் தெரிவித்துள்ளார்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள செராய் கிராமத்தில் 6 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் தங்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல், அவர்களை கொலை செய்து, பின்னர் சடலங்களை முற்றத்துக்கு இழுத்து வந்து எரித்துள்ளனர். ஆறு மாத பெண் குழந்தை மீதும் அக்கும்பல் இரக்கம் காட்டவில்லை. அக்குழந்தையையும் சேர்த்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போலீசார் தகவலின்படி, பூனாராம் (55), அவரது மனைவி பன்வாரி (50), மருமகள் தாபு (24) மற்றும் அவர்களின் 6 மாத மகள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம், ராஜஸ்தானில் அதிகரித்து வரும் குற்றங்கள் தொடர்பாக அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அம்மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் படுகொலைகள் தொடர்பாக, வீடியோ ஒன்றைப் பகிர்ந்து முதல்வர் அசோக் கெலாட்டை, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும், ஜெய்பூர் ஊரக தொகுதி எம்.பி.யுமான கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் கடுமையாகத் தாக்கியுள்ளார். காங்கிரஸ் அரசின் தவறான ஆட்சி வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் பதிவாகும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
;
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “ஜோத்பூரில் 6 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் வருத்தமளிக்கிறது. குற்ற சம்பவங்களில் அசோக் கெலாட் ஏன் திருதராஷ்டிரரைப் போல் இருக்கிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுஒருபுறமிருக்க, தனக்கே பாதுகாப்பு இல்லை என அம்மாநில காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். ஜோத்பூரின் ஓசின்யா எம்எல்ஏவான திவ்யா மடேர்னா, ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில், பாதுகாப்பு குறித்து பேச விரும்பியபோது, சபாநாயகர் சிபி ஜோஷி அவரை தடுத்து நிறுத்தி, இந்த விவகாரத்தில் மாலை 5 மணிக்கு அரசு பதில் அளிக்கும் என்றார். இதனால், கோபமடைந்த அவர், வெளியே வந்து தனது சொந்த அரசாங்கத்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவில் பேசும் அவர், “ஜோத்பூரில் வாழவே பயமாக இருக்கிறது. நான் இரண்டு முறை தாக்கப்பட்டிருக்கிறேன். அங்கு யாரும் பாதுகாப்பாக இல்லை.” என தெரிவித்துள்ளார். “நான் இங்கு பாதுகாப்பாக இல்லை. குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. நான் போலீஸ் பாதுகாப்பில் பயணித்த போதிலும் எனது கார் 20 இடங்களில் தாக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், எனக்கு மிரட்டல் வந்தது. எனது பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் எனது காரை நிறுத்திவிட்டு, நான் தாக்கப்படலாம் என்று எஸ்பியிடம் கூறினேன். ஆனால், உரிய ஏற்பாடுகள் இருப்பதாக எஸ்பி உறுதியளித்தார். இருந்தபோதும், நான் தாக்கப்பட்டேன்” என திவ்யா மடேர்னா தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ராஜஸ்தானில் காங்கிரஸின் காட்டு மிராண்டித்தனமான ஆட்சியில் எளிய பெண்களை கூட விடுங்கள், அவர்களது சொந்த கட்சியை சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூட பாதுகாப்பில்லை. இது வெட்கக்கேடானது.” என விமர்சித்துள்ளார்.
இதனிடையே, ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் காவல்துறை தலைமையகத்திலிருந்து ஜோத்பூருக்கு ஏடிஜி-கிரைம் தினேஷ் புறப்பட்டுச் சென்றார். அவர் இந்த விஷயத்தை விசாரித்து அதன் அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்புவார். அதன்பிறகு, மாலை ஐந்து மணிக்கு மேல் இந்த விவகாரத்தில் அரசு அறிக்கை அளிக்கும் என தெரிகிறது.