எதிர்க்கட்சிகள் கறுப்பு உடை: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சாடல்!

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவிப்பதை மத்திய அமைச்சரும், ராஜ்யசபா பாஜக தலைவருமான பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்

Union minister Piyush Goyal remark on the black clothes worn by Opposition MPs

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, மணிப்பூர் வன்முறை தொடர்பாக இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும்  என வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. 

ஆனால், குறுகிய கால விவாதம் நடத்த தயராக இருப்பதாக ஆளும் பாஜக அரசு கூறி வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் எனவும் பாஜக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகிறது.

இதனிடையே, பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளனர். இது மக்களவை சபாநாயகரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் இந்த தீர்மானம் அவையில் தோற்றுப்போகும். இது தெரிந்துமே எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை அவைக்கு வரவைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இதனை கொண்டு வந்துள்ளனர்.

ராஜஸ்தான் முதல்வருக்கு பிரதமர் அலுவலகம் பதிலடி!

இன்றைய அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், சீன எல்லை பிரச்சினை தொடர்பாக விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதேபோல், ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா, திமுக எம்பி திருச்சி சிவா, காங்கிரஸ் எம்பிக்கள் இம்ரான் பிரதாப்கார்ஹி, சையத் நசீர் ஹூசைன், தீபேந்தர் ஹூடா மற்றும் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா ஆகியோர் மணிப்பூர் நிலைமை குறித்து அனைத்து அலுவல்களையும் ஒத்தி வைத்து விட்டு மணிப்பூர் தொடர்பாக விவாதிக்க ராஜ்யசபாவில் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

அதேசமயம், ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கறுப்பு உடை அணிந்து கலந்து கொண்டுள்ளன. இதனை மத்திய அமைச்சரும், ராஜ்யசபா பாஜக தலைவருமான பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியுறவுக் கொள்கை மீதான அறிக்கையை வெளியிட்டு பேசியதையடுத்து பேசிய பியூஷ் கோயல், எதிர்க்கட்சிகள் கறுப்பு உடை எதிர்ப்பை விமர்சித்து பேசினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “இவ்வளவு தீவிரமான விஷயத்திலும் அரசியல் நடத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது இந்தியாவின் கவுரவப் பிரச்சினை, உலகத்தின் முன் உருவான இந்தியாவின் பிம்பம் இது. கறுப்பு உடை அணிந்தவர்களால் நாட்டின் அதிகரித்து வரும் சக்தியைப் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். அவர்களின் நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் கறுப்பு நிறத்தில் உள்ளன. ஆனால் அவர்களின் வாழ்க்கையிலும் ஒளி இருக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

அதேசமயம், நாடாளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை 12 மணி வரையும் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios