இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்து ஒரு லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அதேவேளையில், மிகக்கடுமையான ஊரடங்கை நீட்டிக்க முடியாது என்பதால், கொரோனாவுடன் வாழ பழகுமாறு இந்திய மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுவிட்டது. எனவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டுவருகின்றன. 

நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கான தடைகளுக்கெல்லாம் தடை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அந்த முழு விவரம் இதோ..

1. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள சேவைகள் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கானதை தவிர, பயணிகளுக்கான விமானம் மற்றும் ரயில் சேவைகளுக்கான தடை தொடரும். 

2. மெட்ரோ ரயில் சேவைக்கான தடையும் நீடிக்கிறது. 

3. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களும் திறக்கப்படாது. ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் வகுப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன. 

4. ஹோட்டல்களுக்கான தடை நீடிக்கிறது. டோர் டெலிவரி செய்வதற்கு தடையில்லை.

5. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளம், பூங்காக்கள் ஆகியவை திறப்பதற்கான தடை நீடிக்கிறது. விளையாட்டு அரங்கங்களை ரசிகர்கள் இல்லாமல் திறக்கலாம். 

6. சமூக, அரசியல், விளையாட்டு, சினிமா, கலாச்சாரம், மதம் சார்ந்த ஒன்றுகூடல்கள் அனைத்திற்கும் தடை. 

7. வழிபாட்டுத் தலங்களுக்கான தடையும் நீடிக்கிறது.