பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பிய இந்தியா!
போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனிடயே, போரினால் பாதிக்கப்பட்டு பாலஸ்தீனர்கள் சிகிச்சை பெற்று வந்த காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவமனை தாக்குதல் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புவோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தனது எக்ஸ் பக்கத்தில், “பாலஸ்தீன மக்களுக்காக கிட்டத்தட்ட 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு IAF C-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தூங்கும் பைகள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற தேவையான பொருட்கள் இதில் அடங்கும்.” என பதிவிட்டுள்ளார்.
புனே அருகே பயிற்சி விமானம் விபத்து: 4 நாட்களில் 2ஆவது சம்பவம்!
இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளின் தீர்வின் கீழ் சுதந்திரமான பாலஸ்தீன அரசை உருவாக்கவும் அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, காசா மீது முழு முடக்கத்தை அறிவித்த இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளுக்காக எல்லையை தற்போது திறந்து விட்டுள்ளது. அதன்படி, எகிப்திலிருந்து காசாவிற்கு ரஃபா எல்லை வழியாக டிரக்குகள் மூலம் உதவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. உலக நாடுகளால் அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள், எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையம் சென்று அங்கிருந்து காசாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.