புனே அருகே பயிற்சி விமானம் விபத்து: 4 நாட்களில் 2ஆவது சம்பவம்!
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அருகே தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி விமானத்தில் இருந்த பயிற்சி விமானி மற்றும் பயிற்றுவிப்பாளர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாராமதி தாலுகாவிற்கு உட்பட்ட கோஜுபாவி கிராமம் அருகே காலை 8 மணியளவில் விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரெட்பேர்ட் ஃப்ளைட் டிரெய்னிங் அகாடமிக்கு சொந்தமான ஒரு பயிற்சி விமானம், கோஜுபாவி கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கி, ஒரு பயிற்சி விமானி மற்றும் ஒரு பயிற்றுவிப்பாளர் காயமடைந்தனர். இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.” என்று பாராமதி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகர் மோரே தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களில் நடந்த 2ஆவது சம்பவம் இதுவாகும். தனியார் அகாடமியின் பயிற்சி விமானம், பாராமதி தாலுகாவில் உள்ள கஃப்டல் கிராமம் அருகே கடந்த 19ஆம் தேதி விபத்துக்குள்ளானதில், விமானி ஒருவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஷீரடி விமான நிலைய முணையம்: மகாராஷ்டிர அரசு ஒப்புதல் - சாய்பாபா பக்தர்கள் மகிழ்ச்சி!
“பாரமதி விமானநிலையத்திற்கு வடக்கே 2 மைல் தொலைவில் விபத்து நடந்துள்ளது. பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சி எடுத்துக் கொள்பவர் ஆகிய இருவரும் பாதுகாப்பாக உள்ளனர். இதுகுறித்து மும்பை DAS விசாரணையை மேற்கொண்டு வருகிறது.” என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.