சமையல் எரியாவு சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகின்றன. ஆனால், தற்போது ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை இருந்தாலும், கடந்த காலங்களை ஒப்பிடும் போது விலை மலை போல் ஏறியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14 கிலோ எடை கொண்ட சமையல் எரியாவு சிலிண்டர் விலையை ரூ.200 குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது, 14 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை, டெல்லியில் ரூ.1053 ஆகவும், மும்பையில் ரூ.1052.50 ஆகவும், சென்னையில் ரூ.1068.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1079 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை சமையல் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, கடைசியாக கடந்த ஜூலை மாதம் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 உயர்த்தின. முன்னதாக, கடந்த மே மாதத்தில் இரண்டு முறை வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.
ஜி20 கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது: பிரதமர் மோடியிடம் வருத்தம் தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின்!
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14 கிலோ எடை கொண்ட சமையல் எரியாவு சிலிண்டர் விலையை ரூ.200 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம், கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப பெண்கள் 50 லட்சம் பேருக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை மாற்றியமைத்தன. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.99.75 குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, தலைநகர் டெல்லியில் 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை இப்போது ரூ.1,680ஆக உள்ளது.
