Asianet News TamilAsianet News Tamil

எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு: விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விஷி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்

Union govt had ordered a detailed investigation on opposition party leaders mobile snooping issue smp
Author
First Published Oct 31, 2023, 3:41 PM IST | Last Updated Oct 31, 2023, 3:41 PM IST

எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அந்த செய்திகளை பெற்றவர்களையும், ஆப்பிள் நிறுவனத்தையும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேசமயம், அரசு ஆதரவுடன் தாக்குபவர்கள் தங்கள் தொலைபேசிகளை ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் எச்சரிக்கை செய்திகளைப் பகிர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களை சாடிய அஷ்வினி வைஷ்ணவ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்பி பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எம்பிக்கள் பிரதமர் மோடியை வேண்டுமென்றே திட்டமிட்டு கட்டாயமாக விமர்சிக்கும் நபர்கள் என்றார்.

மத்தியப்பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஷ்வினி வைஷ்ணவ், ஆப்பிளின் அறிக்கையை சுட்டிக்காட்டி, அச்சுறுத்தல் நுண்ணறிவு சமிக்ஞைகளின் அடிப்படையில் 150 நாடுகளில் அதுபோன்ற அறிவிப்புகள் சென்றுள்ளன. அவை பெரும்பாலும் முழுமையற்றவை என்றும், அந்த செய்திகளில் சில தவறான எச்சரிக்கைகளாக இருக்கலாம் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த செய்திகளை பெற்றவர்களையும், ஆப்பிள் நிறுவனத்தையும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இந்த கட்டாய விமர்சகர்கள், அவர்களுக்கு பெரிய பிரச்சனை இல்லாத போது, தங்கள் பக்கம் கவனம் திரும்பும் வகையில், பிரதமர் மோடியின் தலைமையிலான முன்னேற்றத்தில் இருந்து மக்களை திசை திருப்ப விரும்புகிறார்கள்.” என்று பிரியங்கா சதுர்வேதி, மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எம்.பி.க்களை அஷ்வினி வைஷ்ணவ் சாடினார்.

அதானியை தொட்டால் எதிர்கட்சியினரின் செல்போன் ஒட்டு கேட்பு - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

இதனிடையே, அரசு ஆதரவுடன் தாக்குதல் நடப்பதாக அறிவிப்புகள் கூறவில்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. “அரசு நிதியுதவியுடன் தாக்குதல் நடத்துபவர்கள் நல்ல நிதியுதவி மற்றும் அதிநவீனமானவர்கள். இத்தகைய தாக்குதல்களைக் கண்டறிவது அச்சுறுத்தல் நுண்ணறிவு சிக்னல்களை நம்பியுள்ளது. பெரும்பாலும் இவை முழுமையற்றது. சில அறிவிப்புகள் தவறானவையாக இருக்கலாம்.” என ஆப்பிள் தனது தொழில்நுட்ப ஆதரவுப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி, மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலருக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அரசு ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்கள் உங்கள் சாதனத்தை குறிவைக்கலாம்; உங்களது செல்பேசி தகவல்கள் திருடப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில் உள்ள மூன்று பேருக்கும் இதுபோன்ற எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, அதானியை தொட்டவுடன் இது நடக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios