இந்தியாவில் 67 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2212 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்து 600க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகள் வருவாயை இழந்துள்ளன. வருவாயை இழந்துள்ள அதேவேளையில், வழக்கமான மக்கள் நல திட்டங்களையும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியுள்ளது. எனவே கடும் பொருளாதார சிக்கலில் அரசு உள்ளது. 

ஊரடங்கு நிலையை சமாளிக்க பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களின் வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் நிதியுதவி செய்தனர். மத்திய, மாநில அரசுகள் வருவாயை இழந்து தவித்தாலும், மக்களுக்கான திட்டங்களை நிறுத்திவிடவில்லை.

இந்நிலையில், அரசு பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தில் 30%ஐ குறைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதுகுறித்து ஆலோசித்துவருவதாகவும் தகவல் வெளியானது. சில ஊடகங்கள் அதுகுறித்து செய்தியும் வெளியிட்டன.

ஆனால், அப்படியான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை குறைக்க ஆலோசித்து வருவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. உண்மையாகவே, மத்திய அரசு ஊழியர்களின் குறைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.