Asianet News TamilAsianet News Tamil

இந்திய பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாரமன் - என்னென்ன அம்சங்கள்?

இந்திய பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்

Union Finance Minister Nirmala Sitharaman tabled White Paper on the Indian Economy what are the highlights smp
Author
First Published Feb 8, 2024, 5:32 PM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தார். கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர், வருகிற 9ஆம் தேதி (நாளை) நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய மற்றும் பிந்தைய, நாட்டின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை வருகிற 10ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் எனவும், அதற்காக பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்திய பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையானது, பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி மற்றும் அதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தையும் ஒப்பிட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தோல்விகளின் பட்டியலும், அவற்றில் இருந்து மீள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டனி அரசாங்க எடுத்த நடவடிக்கைகளின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.

வெள்ளை அறிக்கையின் நோக்கங்கள் என்ன


நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான நோக்கங்கள் என்ன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 

1. முதலாவதாக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் 2014 இல் பதவியேற்றபோது, பொருளாதாரம், நிதி நெருக்கடிகள் எப்படி இருந்தன? நிர்வாகத்தின் தன்மை எப்படி இருந்தது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய மக்களுக்கும் தெரிவிப்பது.

2. இரண்டாவதாக, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தற்போதைய அமிர்த காலத்தில் மக்களின் வளர்ச்சி ஆசைகளை நிறைவேற்றும் திறன் கொண்டதாக மாற்றுவதற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் எடுத்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பது.

3. மூன்றாவதாக, அவ்வாறு செய்வதன் மூலம், தேசிய நலன்களின் முக்கியத்துவம் மற்றும் அரசியல் தேவைகள் மீதான நிர்வாக விஷயங்களில் நிதிப் பொறுப்பு பற்றிய விரிவான விவாதத்தை உருவாக்குவது

பிரதமர் மோடி ஓபிசி சாதி சர்ச்சை: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு - உண்மை என்ன?

4. நான்காவதாக, நாடு வாய்ப்புகளை திறக்கும்போது, புதிய உத்வேகத்துடன் தேசிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். என்பன உள்ளிட்ட 4 முக்கிய நோக்கங்களுக்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் என்ன?


** 2004 இல் பிரதமராக பொறுப்பேற்ற டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கத்திற்கு "UPA அரசாங்கம்" என்றும், 2014 இல் பிரதமர் பதவிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்திற்கு "நமது அரசு" போன்ற வார்த்தைகளை வெள்ளை அறிக்கை பயன்படுத்தியுள்ளது.

** ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டின் பொருளாதார அடித்தளத்தை பலவீனப்படுத்தியுள்ளதாக வெள்ளை அறிக்கை கூறுகிறது.

** ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆரோக்கியமான பொருளாதாரத்துக்கான சீர்திருத்தங்களுக்கு தயாரானது. ஆனால் அதன் பத்தாண்டுகளில் செயல்படாமல் இருந்தது என வெள்ளை அறிக்கை கூறுகிறது.

** ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்தது, வங்கித் துறை பெரும் நெருக்கடியில் இருந்தது, அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்தது. அரசாங்கம் பெரும் கடனில் இருந்தது.

** கருவூலத்திற்கு, நிதி, வருவாய் பற்றாக்குறைக்கும் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதன் பின்னணியில் ஏராளமான மோசடிகள் இருந்தன.

** வெள்ளை அறிக்கையின்படி, 2004 இல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அதன் ஆட்சிக் காலத்தை தொடங்கியபோது பொருளாதாரம் 8 சதவீதமாக வளர்ச்சியடைந்திருந்தது (2004 நிதியாண்டில் தொழில் மற்றும் சேவைத் துறை வளர்ச்சி தலா 7 சதவீதத்திற்கு மேல் மற்றும் விவசாயத் துறை 9 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி) உலக பொருளாதார சூழலும் அப்போது நன்றாக இருந்தது. ஆனால், 2014 இல் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்தது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்திருந்தது.

** அரசியல் மற்றும் கொள்கை ஸ்திரத்தன்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தை போல் அல்லாமல், பொருளாதார நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுத்தது; துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொண்டது மற்றும் பொருளாதாரத்தின் மீது ஒரு உறுதியான கட்டுமானத்தை உருவாக்கியது.

** ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச் சென்ற சவால்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முறியடித்தது. என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios