பொது சிவில் சட்டம்: பாஜக பதுங்குகிறதா? பின் வாங்குகிறதா?
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் மசோதாக்களின் பட்டியலில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா இடம்பெறவில்லை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 23 நாட்களில், விடுமுறை நீங்கலாக மொத்தம் 17 நாட்கள் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதனை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதிபடுத்தியுள்ளார். “2023ஆம் ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தொடரின்போது கொண்டு வரப்பட உள்ள சட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை அளிக்க வேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கடந்த மே 28ம் தேதி திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கூடும் முதல் கூட்டத் தொடர் இது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முதலில் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கி, பின்னர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் நிறைவேற்றபடும் மசோதாக்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மொத்தம் 21 மசோதாக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, டெல்லி அரசு மீதான சர்ச்சைக்குரிய அவசரச்சட்டம் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், டிஜிட்டல் தனிப்பட்ட தரவு, சர்ச்சைக்குரிய டிஎன்ஏ தொழில்நுட்பம் (பயன்பாடு மற்றும் பயன்பாடு) ஒழுங்குமுறை மசோதா 2019 மற்றும் சினிமாட்டோகிராஃப் (திருத்தம்) மசோதா 2019 ஆகியவற்றை திரும்பப் பெறுதல் உள்ளிட்டவையும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா 2022, ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா 2023, பல மாநில கூட்டுறவு மசோதா 2022, தியான மசோதா 2021 மற்றும் வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023 என்பன உள்ளிட்ட மொத்தம் 21 மசோதாக்கள் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவற்றையும் சேர்த்து மொத்தம் 31 மசோதாக்களை நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
இந்திய ராணுவத்தில் சிறுதானிய உணவுகள்: மத்திய அரசு முடிவு!
ஆனால், பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளான பொது சிவில் சட்ட மசோதா இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்டம்தான் பொது சிவில் சட்டம். மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்புத்தான் பொது சிவில் சட்டம் எனப்படுகிறது. இந்த பொது சிவில் சட்டம் மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்று.
பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைப் பெறும் புதிய நடைமுறையை சட்ட ஆணையம் அண்மையில் தொடங்கியது. அதன்படி, சட்ட ஆணையத்துக்கு தங்களது கருத்துக்களை பலரும் அனுப்பி வருகின்றனர். ஆனால், பொது சிவில் சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும், 2024 தேர்தலுக்குள் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில், மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது என பொது சிவில் சட்டத்தை வலியுறித்தி பேசினார்.
அதன் தொடர்ச்சியாக, பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன. எதிர்வரவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், பொது சிவில் சட்ட மசோதாவை ஆளும் பாஜக அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு வெளியிட்டுள்ள, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் நிறைவேற்றபடும் மசோதாக்களின் பட்டியலில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா இடம்பெறவில்லை.
இதுகுறித்து விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கூறுகையில், “நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விவாதிக்கவும், நிறைவேற்றவும் 21 மசோதாக்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன. அவற்றில் பொது சிவில் சட்ட மசோதா இடம்பெறவில்லை. பாஜக அரசு அதைத் திடீரெனப் பட்டியலில் சேர்த்தால் வியப்படைவதற்கில்லை. பொது சிவில் சட்ட விஷயத்தில் பாஜக பின் வாங்குகிறதா? பதுங்குகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.