இந்திய ராணுவத்தில் சிறுதானிய உணவுகள்: மத்திய அரசு முடிவு!
இந்திய ராணுவத்தில் சிறுதானிய உணவு வகைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது

அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவு வகைகளில் புரதச்சத்து, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் அண்மையில் பேசிய பிரதமர் மோடி, சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். அதன் தொடர்ச்சியாக, சிறுதானியம் தொடர்பான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், இந்திய ராணுவத்தில் சிறுதானிய உணவு வகைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்புப் பணியாளர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில், ஆயுதப் படைகளின் மெஸ்கள், கேன்டீன்கள் மற்றும் பிற உணவு விற்பனை நிலையங்களில் சிறுதானிய அடிப்படையிலான உணவு வகைகளை சேர்க்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் (FSSAI) பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா ஆகியோர் கையெழுத்திட்டனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் (சப்ளை மற்றும் போக்குவரத்து) லெப்டினன்ட் ஜெனரல் ப்ரீத் மொஹிந்தர் சிங் மற்றும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ நிர்வாக இயக்குநர் இனோஷி சர்மா ஆகியோரும் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனர்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நடவடிக்கையானது உணவுப் பன்முகத்தன்மை மற்றும் சிறுதானிய அடிப்படையிலான உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்த விழிப்புணர்வை பணியாளர்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006இன் படி, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து ஆயுதப்படைகளின் மெஸ், கேன்டீன்கள், உணவு விற்பனை நிலையங்களின் சமையல்காரர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் இந்த ஒத்துழைப்பு உறுதி செய்யும்.” என கூறப்பட்டுள்ளது.
அட..! உண்மையான வாஷிங் பவுடர்தான் போலயே? அஜித் பவார் முகாமுக்கு கிடைத்த முக்கியத் துறைகள்!
“தேசத்திற்கான பாதுகாப்பு படையினரின் சேவையில் அவர்கள் வலுவாகவும், நெகிழ்ச்சியுடனும் இருக்க இது உதவுகிறது. ஆயுதப்படைகளின் குடும்பங்களும் சிறுதானிய அடிப்படையிலான சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுக்க இந்த நடவடிக்கை அவர்களை ஊக்குவிக்கும்.” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவாலான நிலப்பரப்பு மற்றும் மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளின் அடிப்படையில், உணவு மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. சிறுதானியங்கள் அவற்றின் ஊட்டச்சத்துக்காக அறியப்படுகின்றன எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் போது, ‘பாதுகாப்புக்கான ஆரோக்கியமான ரெசிபிகள்’ என்ற புத்தகத்தை இரு அமைச்சர்களும் வெளியிட்டனர். எஃப்எஸ்எஸ்ஏஐ உருவாக்கிய இந்த புத்தகம், சிறுதானியம் சார்ந்த உணவு வகைகளை உள்ளடக்கியது.