உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 24,506 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 775 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 57 பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் பள்ளி,கல்லூரிகளில் நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை செப்டம்பர் மாதத்தில் தொடங்கலாம் என்று பல்கழைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) உயர்மட்டக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. 2019-20ம் கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படாத நிலையில் அவை அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் அவை மேலும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய பிறகே மாணவர்களை கல்லூரிகளுக்கு வரவழைக்க முடியும் என்பதால் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. எனவே கல்லூரிகளை செப்டம்பர் மாதத்தில் திறந்து புதிய கல்வி ஆண்டை தொடங்கலாம் என மத்திய அரசுக்கு யூ.ஜி.சி பரிந்துரைத்திருக்கிறது. மேலும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்துவது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இறுதி முடிவு எடுத்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கக்கூடும். வழக்கமாக ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அட்மிஷன் நடந்து கல்லூரிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.