மதநல்லிணக்தத்தை வலியுறுத்தும் விதமாக கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயில் வளாகத்தில்  வரலாற்றிலேயே முதல்முறையாக முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து அளிக்கப்பட்டது.

உடுப்பியில் பழமையான பெஜாவர் மடத்தில் முதல்முறையாக, கடந்த சனிக்கிழமை முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது.பெஜாவர் மடாதிபதி விஸ்வேச தீர்த்த சுவாமி (86) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 150 முஸ்லிம்களும், இந்து மத அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

அதிகாலை நேரத்தில் கோயிலின் வளாகத்தில் தொழுகை நடத்திபின், மடத்தின் அன்னபிரமா வளாகத்தில் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது.

அப்போது முஸ்லிம்களுக்கு களுக்கு பேரீட்சை, வாழைப்பழம், தர்பூசணி, ஆப்பிள் மற்றும் முந்திரிப் பருப்புகளை மடாதிபதி விஸ்வேச தீர்த்த சுவாமி பரிமாறினார்.

 இந்த சைவ இப்தார் விருந்தின் இறுதியில் கறுப்பு மிளகில் தயாரிக்கப்பட்ட கஷாயம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக பெஜாவர் மடாதிபதிவிஸ்வேச தீர்த்த சுவாமி கூறும்போது, “ இந்து -இஸ்லாமியர் இடையே மத‌ நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக இந்த ‘மத நல்லிணக்க உணவு’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதில் எனது அழைப்பை ஏற்று, 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்றிலேயே முதல்முறையாக முஸ்லிம்கள் இந்து கோயிலில் இப்தார் விருந்து உண்டு, தொழுகை நடத்தி உள்ளனர்.

நான் செய்தது ஒன்றும் பெரிய விசயமல்ல, சிறிய பங்களிப்புதான். மக்கள் அனைவரும் மதவேற்றுமை பாராமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி மிகவும் மனநிறைவு அளிக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் இது போல் நடக்க வேண்டும் என நினைக்கிறேன், கிறிஸ்துவ மக்களுக்கும் இதே போல விருந்து அளிக்க வேண்டும்.

இந்துக்களும், இஸ்லாமியர் களும் ஒரே கடவுளின் பிள்ளைகள். குடும்பத்தின் உற்ற சகோதரர்கள். மதத்தின் பெயரால் மோதல் போக்கு கடைப்பிடிப்பதை கடவுள் விரும்புவதில்லை” என்று தெரிவித்தார். 

உடுப்பி பெஜாவர் மடத்தின், இந்த மத நல்லிணக்க நடவடிக்கையை இஸ்லாமிய மத தலைவர்களும், இந்து மத‌ அமைப்பினரும் பாராட்டியுள்ளனர்.