மோடிய விட்டா வேற யாரு இருக்காங்க? உத்தவ் தாக்கரே சரமாரி கேள்வி!
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் குறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சாடியுள்ளார்
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்று முடிந்துள்ளது. மூன்றாவது கூட்டம் வருகிற 31ஆம் தேதி மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஏற்கனவே 26 கட்சிகள் உள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் மும்பை கூட்டத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலான கிராண்ட் ஹயாட்டில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், கூட்டணியின் புதிய லோகோ வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் மும்பை கூட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, பாஜகவை கடுமையான விமர்சித்தார்.
இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருக்கின்றனவே என்ற கேள்விக்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, “எங்கள் கூட்டணியில் பிரதமர் முகத்திற்குப் பல தேர்வுகள் உள்ளன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பிரதமர் மோடியை விட்டால் வேறு என்ன தேர்வு உள்ளது?” என கேள்வி எழுப்பினார்.
‘எனது பாரத ரத்னா அமிதாப் பச்சன்’: ராக்கி கட்டிய மம்தா பானர்ஜி!
கர்நாடகாவில் நடந்ததை நீங்கள்பார்த்தீர்கள். அவர்கள் பஜ்ரங் பலியைக் கொண்டு வந்தனர். ஆனால், கடவுள் கூட அவர்களை ஆசீர்வதிக்கவில்லை என்று கூறிய உத்தவ் தாக்கரே, பாஜகவின் ஆட்சியை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசினார். “ஆங்கிலேயர்களும் வளர்ச்சிப் பணிகளைச் செய்தார்கள். ஆனால் நாம் அவர்களை முழு பலத்துடன் விரட்டியடிக்கவில்லை என்றால், நாம் சுதந்திரத்தை அடைந்திருக்க முடியாது. எங்களுக்கு வளர்ச்சி வேண்டும். அதேசமயம், சுதந்திரமும் வேண்டும்.” என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் உடனிருந்தார். அப்போது பேசிய அவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் ஊழல் குறித்து பிரதமர் மோடியின் கருத்தை நினைவுபடுத்தினார். “பிரதமர் மோடி குறிப்பிட்ட நீர்ப்பாசன ஊழலை முழுமையாக விசாரித்து உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்” என்று சரத பவார் வலியுறுத்தினார்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தாம் நடுநிலை வகிப்பதாக தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் கருத்து குறித்து சரத் பவார் கூறுகையில், மாயாவதி இன்னும் பாஜகவுடன் தனது தொடர்பை உயிர்ப்புடன் வைத்துள்ளார். எனவே, அதுகுறித்து அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.