‘எனது பாரத ரத்னா அமிதாப் பச்சன்’: ராக்கி கட்டிய மம்தா பானர்ஜி!
அமிதாப் பச்சன் எனக்கு பாரத ரத்னா போன்றவர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி மகிழ்வர். அந்த வகையில், நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ராக்கி கட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமிதாப் பச்சன் தனக்கு பாரத ரத்னா போன்றவர் என்றார். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மும்பை சென்றுள்ள மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அமிதாப் பச்சனை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்தார்.
மம்தா பானர்ஜிக்கு, அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன் ஆகியோர் மும்பை ஜூஹூவில் உள்ள அவர்களது இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவர்களது மகள் ஆராத்யா பச்சன் ஆகியோரையும் அப்போது உடனிருந்தனர். அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் மற்றும் பேத்தி நவ்யா நவேலி நந்தாவையும் மம்தா பானர்ஜி சந்தித்தார்.
பிரதமர் மோடிக்கு சாதகமாக 80 சதவீத இந்தியர்கள்: ஆய்வில் தகவல்!
அமிதாப்பச்சன் குடும்பத்தின் மீது தனது அபிமானத்தை வெளிப்படுத்திய மம்தா பானர்ஜி, “இந்த குடும்பத்தை நான் நேசிக்கிறேன். அவர்கள் இந்தியாவின் நம்பர் ஒன் குடும்பம், அவர்கள் திரைப்படத் துறைக்கு நிறைய பங்களிப்புகளை செய்துள்ளனர்.” என்றார். இந்த சந்திப்பின்போது, மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் துர்கா பூஜை மற்றும் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் பங்கேற்க அமிதாப் பச்சனுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். அப்போது, இந்திய சினிமாவுக்கு அவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமிதாப் பச்சனுக்கு மதிப்புமிக்க பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று மம்தா பானர்ஜி தீவிரமாக வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.