ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுவதற்கு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிரா முழுவதும் போராட்டங்களை நடத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுவதற்கு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் அக்கட்சி சார்பில் சனிக்கிழமை போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக எந்த போட்டியிலும் பங்கேற்கக் கூடாது என எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
டிவியை உடைத்து போராட்டம்
மும்பையில் உத்தவ் சிவசேனா சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே, தொலைக்காட்சி பெட்டி ஒன்றை அடித்து உடைத்து, போட்டியை ஒளிபரப்புவதை எதிர்த்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
“கிரிக்கெட் மீது எங்களுக்கு வெறுப்பில்லை, பாகிஸ்தானுடன் விளையாடுவதையே வெறுக்கிறோம்” என்றும் "பாரத் மாதா கி ஜெய்" என்றும் கோஷங்களை எழுப்பினர். பின்னர், உடைக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி மீது ஏறி மிதித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
தொலைக்காட்சியை உடைத்த பிறகு பேசிய துபே, "நாங்கள் இந்த போட்டியை பார்க்க விரும்பவில்லை. இந்த ஒளிபரப்பு தடை செய்யப்பட வேண்டும். பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு, அதை புறக்கணிக்க வேண்டும். பிசிசிஐ மற்றும் ஐசிசி 140 கோடி இந்தியர்களின் உணர்வுகளுடன் விளையாட எந்த உரிமையும் இல்லை என்பதை உணர்த்தவே நாங்கள் இந்த செய்தியை அனுப்புகிறோம்" என்றார்.
இந்திய வீரர்கள் உடனடியாக போட்டியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "நீங்கள் உண்மையான தேசபக்தர்களாக இருந்தால், கடைசி நிமிடத்தில் கூட போட்டியைப் புறக்கணித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பி வாருங்கள். நாங்கள் உங்களை எங்கள் தோள்களில் சுமந்து வரவேற்போம். ஆனால், நீங்கள் விளையாடினால், நாங்கள் உங்களை புறக்கணித்து விமர்சிப்போம், ஏனெனில் தேசத்தை விட பெரியது எதுவும் இல்லை" என்றும் அவர் கூறினார்.
உத்தவ் தாக்கரே கண்டனம்
முன்னதாக, மாநிலம் முழுவதும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய வீரர்கள் எல்லையில் தங்கள் உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கும்போது பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார்.
"இந்தியாவில் ஆசிய கோப்பை நடந்தபோது பாகிஸ்தான் புறக்கணித்தது என்றால், பிசிசிஐ ஏன் அதே காரியத்தைச் செய்யக்கூடாது?" என்றும் தாக்கரே கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் மௌனம் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்றால், கிரிக்கெட்டும் இரத்தமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?" என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
