ராஜஸ்தான் டெய்லர் கொலை செய்யப்பட்ட விவகாரம்… ஐந்து மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கன்ஹையா லால் என்பவரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் வீடியோவில் ஆயுதத்துடன் இருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கன்ஹையா லால் என்பவரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் வீடியோவில் ஆயுதத்துடன் இருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உதய்பூரில் உள்ள கண்னையா லால் என்பவரின் கடைக்கு கத்தி மற்றும் வாளுடன் சென்ற சிலர் பட்டப்பகலில் கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் துணிகளுக்கு அளவீடு செய்வதாக கூறி தையல் கடைக்கு வந்து கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் கண்ணையாலால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கொலைகாரர்கள் தையல்காரரின் தலையை ஆயுதத்தால் கொடூரமாக வெட்டியது மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் கொலை ஆயுதத்தை காட்டி மிரட்டியுள்ளனர். இதை அடுத்து ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள பீமா பகுதியில் அவர்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் டெய்லர் கொடூரமாக கொலை… காரணம் இதுதான்… மாநிலத்தில் உச்சக்கட்ட பதற்றம்!!
அவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் ரியாஸ் மற்றும் கவுஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதில் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் தரப்பில், கண்ணையாவின் கொலைக்கு பின்னணியில் திட்டமிட்ட சதி இருப்பதாகத் தெரிகிறது. அனைத்து வீடியோக்களையும் போலீசார் பார்த்துள்ளனர். இவற்றின் அடிப்படையில் மேலும் 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து… ராஜஸ்தான் டெய்லர் கொடூரமாக வெட்டி படுகொலை!!
உதய்பூரில் பதற்றம் அதிகரித்துள்ளதால், மாவட்டம் முழுவதும் 24 மணி நேரம் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் டிஜிபி எம்.எல் லாதர், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ அல்லது வேறு எந்த வைரல் வீடியோவையும் காட்டவோ அல்லது பதிவேற்றவோ வேண்டாம் என்று தொலைக்காட்சி சேனல்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொடூரமான வீடியோக்களைப் பகிர்வதைத் தவிர்த்து, அமைதி மற்றும் ஒழுங்கைப் பேண ஒத்துழைக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி வாட்ஸ்அப் குழு அல்லது எங்காவது வீடியோ பகிரப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.