ஊக்கத்தொகை பிரச்சினை: மூத்த அதிகாரியுடன் சண்டையிட்ட பைஜூஸ் பெண் ஊழியர்!
ஊக்கத்தொகை பிரச்சினை தொடர்பாக பைஜூஸ் நிறுவன மூத்த அதிகாரியுடன் பெண் ஊழியர் ஒருவர் சண்டையிடுவதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

பைஜூஸ் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவானது, ‘Ghar Ke Kalesh’ எனும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பணியின் போது அதிக மன அழுத்தத்தை கொடுத்ததற்காக ஊழியர் ஒருவருக்கும் பைஜூஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையேயான சண்டை என அந்த வீடியோவை பகிர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பெண் ஊழியர் ஒருவர் தனது ஊக்கத்தொகை தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவருடன் பேசுவது போன்று உள்ளது. பைஜூஸ் பணி கலாசாரம் குறித்து அந்நிறுவன ஊழியர்கள் கடந்த ஆண்டு புகார் தெரிவித்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில் இருக்கும் பெண், ஊக்கத்தொகை மற்றும் ஆதரவு இல்லாதது குறித்து புகார் கூறுவதைக் காண முடிகிறது. மேலும், அந்த பெண் அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் பேசுவதையும் உறுதி செய்து கொள்கிறார்.
“ஆமாம். நான் பைத்தியம் பிடித்து கத்துகிறேன்.” என அந்த வீடியோவில் கூறும் பெண், பணிநீக்கங்கள் குறித்தும், full and final settelement ஆக அவருக்கு கிடைத்த வெறும் ரூ.2000 குறித்தும் பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. வீடியோவை பகிர்ந்துள்ள அந்த ட்விட்டர் பக்கத்தில், சம்பவம் நடைபெற்றதில் இருந்து அப்பெண்ணை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். “குறைந்த மனப்பான்மை கொண்ட சில முட்டாள்களை சமாளிக்க விரும்பாமல், வீட்டில் இருந்து பணி புரிவது சிறந்தது என நான் உறுதியாக நம்புவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்; பணம், வாய்ப்பு அனைத்தையும் தாண்டி, உங்கள் மன அமைதியைப் பாதுகாப்பது முக்கியமானது.” என நெட்டிசன் ஒருவர் இந்த வீடியோவுக்கு எதிர்வினையாற்றியுள்ளார்.
மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளது: ப.சிதம்பரம் விளாசல்!
“இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், கிரிக்கெட் அணிக்கும் கோடிகளை நன்கொடையாக கொடுக்கும் பைஜூஸ், 12 மாதங்கள் பணி புரிந்து, பணிநீக்கத்திற்குப் பிறகு ரூ.2000 கருணைத் தொகையாக பைஜூஸ் கொடுப்பது உச்சபட்ச துஷ்பிரயோகம்.” என மற்றொருவர் பாதிவிட்டுள்ளார். அதேபோல், “பைஜூஸ் வேலை கலாசாரம் மிகவும் மோசமானது என்று நான் தனிப்பட்ட முறையில் கேள்விப்பட்டேன், எனது உறவினர் ஒருவர் இலக்குகளை நிறைவேற்றுவதற்கான கடுமையான அழுத்தத்தின் காரணமாக தனது வேலையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.” என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.