துங்கநாத் கோயில்: உலகின் மிக உயரமான சிவன் கோயில் ஏன் 6 - 10 டிகிரி சாய்ந்துள்ளது?
உலகின் மிக உயரமான சிவன் கோயில், துங்கநாத் கோயில் 6 முதல் 10 டிகிரி சாய்ந்துள்ளதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிக உயரமான சிவன் கோயிலாக துங்கநாத் கோயில் கருதப்படுகிறது. இந்த கோயில் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கர்வால் இமயமலை பகுதியில் 12,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த கோயில் 6 முதல் 10 டிகிரி சாய்வாக உள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள சிறிய கட்டமைப்புகள் 10 டிகிரி சாய்ந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொல்லியல் துறையின் டேராடூன் வட்டத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் இதுகுறித்து பேசிய போது “ முதலில், சேதத்தை உடனடியாக சரிசெய்ய முடிந்தால், அதன் மூல காரணத்தை நாங்கள் கண்டுபிடிப்போம். மேலும், கோயிலை முழுமையாக ஆய்வு செய்த பிறகு விரிவான வேலைத் திட்டம் தயாரிக்கப்படும்”என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : வைகாசி விசாகம் 2023 எப்போது ? முருகனின் பரிபூரண ஆசியை பெற எப்படி வழிபட வேண்டும்?
தொல்லியல் துறை அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ கோயிலின் நிலை குறித்தும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது. மேலும் பொது மக்களிடமிருந்து ஆட்சேபனைகளைக் கோரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
கோயில் ஏன் சாய்ந்துள்ளது என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை. தேவைப்பட்டால், நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே சேதமடைந்த அஸ்திவாரக் கல்லை மாற்றுவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துங்கநாத் கோயில் பத்ரி கேதார் கோயில் கமிட்டியின் (BKTC) நிர்வாகத்தின் கீழ் வருகிறது. எனவே இது தொடர்பாக பிகேடிசிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாங்கள் இன்னும் பதிலைப் பெறவில்லை என்றும் தெரிவித்தனர்.
துங்கநாத் கோவிலின் வரலாறு
இது ஒரு பழமையான கோயிலாகும். இது கடல் மட்டத்திலிருந்து 3,690 மீட்டர் (12,106 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பாண்டவர்களுக்கும் இந்த கோயிலுக்கும் தொடர்புள்ளதாக புராணங்கள் கூறுகின்றனர். குருஷேத்திர போரின் போதுப் கௌரவர்களை தோற்கடித்த பின்னர், சகோதர கொலைகள் மற்றும் பிராமணர்களை கொன்ற பாவங்களுக்கு பரிகாரம் செய்ய பாண்டவர்கள் எண்ணினர்.
அவர்கள் அரியணையைத் துறந்து, சிவபெருமானை வழிபட்டுத் தங்கள் துர்ச்செயல்களில் இருந்து விடுபடும்படி வேண்டும் என்று நினைத்தனர். வாரணாசியை அடைந்தனர், ஆனால் போரில் ஏற்பட்ட ஏமாற்றத்தாலும் மரணத்தாலும் மிகவும் வேதனையடைந்த சிவபெருமான் நந்தியின் வடிவத்தை ஏற்று கர்வாலுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
எனவே பாண்டவர்கள் கர்வாலுக்குப் பயணம் செய்து, சிவபெருமானின் ஆசியை பெற நினைத்த பாண்டவர்கள் சிவனை வழிபடவும், தங்கள் குற்றங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகவும், அங்கு கோயிலை கட்டியதாக புராணக்கதைகள் கூறுகின்றன.
8ஆம் நூற்றாண்டின் இந்து அறிஞரும் சீர்திருத்தவாதியுமான ஆதி சங்கராச்சாரியார் இந்தக் கோயிலை எழுப்பியதாகக் கருதப்படுகிறது. நாகரா கட்டிடக்கலை பாணியில் உருவாக்கப்பட்ட ஒரு அடிப்படை கட்டிடம் இந்த கோவில். கோவிலின் பிரதான தெய்வம் ஒரு லிங்கம். பார்வதி தேவி மற்றும் பிற இந்து தெய்வங்களுக்கான ஆலயத்தையும் காணலாம். ஏப்ரல் முதல் நவம்பர் வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்லலாம். குளிர்கால மாதங்களில், கோவில் மூடப்பட்டு, சிவன் சிலை, அருகில் உள்ள கோவிலுக்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விநாயகரின் இந்த 1 மந்திரம் போதும்.. குறைவில்லா செல்வம் முதல் எவ்வளவு பலன்கள் உண்டு தெரியுமா?