சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து 63 சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை முடிந்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. 

அதில், சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு உத்தரவிட்டது. மேலும், கடந்த ஆண்டு பிறப்பித்த தீர்ப்புக்கு தடைவிதிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர், 

இதன் மூலம் இந்த ஆண்டும் சபரிமலைக்கு பெண்கள் செல்லத் தடையில்லை. இந்த உத்தரவால், சபரிமலைக்குச் செல்ல 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளார்கள்
.

இந்தத் தீர்ப்பு குறித்து பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " நீதிமன்ற உத்தரவில் இருந்து நாம் தெரியவருவது என்னவென்றால், பெண்கள் சபரிமலைக்குச் செல்வதில் தடையில்லை. யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்பதுதான். எந்தவிதமான பாகுபாடும் இல்லை என்று சிலர் கூறுவது முற்றிலும் தவறானது. 

ஏனென்றால், குறிப்பிட்ட வயதில் உள்ள பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. நான் வரும் 16-ம் தேதி சபரிமலைக்குத் தரிசனம் செய்ய இருக்கிறேன். 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வரும் வரை பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.


மும்பையில் உள்ள தர்ஹா, சனிசிங்னாபூர் ஆகிய ஸ்தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது சட்டப் போராட்டம் நடத்தி உரிமை பெற்றுக் கொடுத்தவர் திருப்தி தேசாய்.சபரிமலை விவகாரத்திலும் திருப்தி தேசாய் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

கடந்த ஆண்டு சபரிமலை விவகாரம் தீவிரமாக இருந்தபோது, சபரிமலைக்குச் செல்ல முயன்றபோது கொச்சி விமான நிலையத்தை விட்டு திருப்தி தேசாயை வெளியேறவிடாமல் பக்தர்கள் மறித்ததால் அவர் திரும்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.