இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 722 பேர் உயிரிழந்துள்ளனர். 4300க்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் 6430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 840 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவிற்கு அடுத்த இடத்தில் இருந்த டெல்லியை, குஜராத் மாநிலம் ஓவர்டேக் செய்துவிட்டது. கடந்த சில நாட்களாக குஜராத்தில் பாதிப்பு தாறுமாறாக எகிறியதையடுத்து, டெல்லியை பின்னுக்குத்தள்ளி கொரோனா பாதிப்பில் இரண்டாமிடம் பிடித்துள்ளது குஜராத். டெல்லியில் 2376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் 2624 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த கேரளாவில் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த 10 நாட்களாக பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 1683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

எனவே இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவும் குஜராத்தும் மட்டுமே கவலையளிக்கும் மாநிலங்களாக உள்ளன. கோவாவில் 7 பேரும் மணிப்பூரில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இருவருமே பூரண குணமடைந்ததால், கொரோனா இல்லாத மாநிலங்களாக கோவாவும் மணிப்பூரும் திகழ்ந்தன. 

இந்நிலையில், திரிபுராவும் கொரோனா இல்லாத மாநிலமாக உருவெடுத்துள்ளது. திரிபுராவில் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இருவருமே கொரோனாவிலிருந்து மீண்டதால், கொரோனா இல்லாத மாநிலமாக திரிபுரா உருவாகியிருப்பதை அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் தேப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

 

திரிபுராவில் 111 பேர் கண்காணிப்பில் உள்ள நிலையில், 227 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.