உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 23,077 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 718 பேர் பலியாகி இருப்பதாக  சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 37 பேர் பலியாகி உள்ளனர். ஆறுதல் தரும் செய்தியாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 4,748 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் நேற்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அங்கு 6,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குஜராத்தில் 2,624 பேரும், டெல்லியில் 2,376 பேரும், ராஜஸ்தானில் 1,964 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பே இல்லாத மாநிலமாக திரிபுராவும் தற்போது மாறியிருக்கிறது.

 

அங்கு கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட இரண்டு பேர் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முதல் நபர் குணமாகி வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் இரண்டாவது நபருக்கும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல நீங்கி தற்போது பூரண நலம் பெற்று இருக்கிறார். நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து தற்போது இந்தியாவில் திரிபுரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அறவே ஒழிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அம்மாநில முதல்-மந்திரி பிலாப் குமார் தனது ட்விட்டர் பதிவில், திரிபுராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இரண்டாவது நபரும் குணமடைந்துள்ளார். இதையடுத்து கொரோனா இல்லாத மாநிலம் என்ற பெருமையை திரிபுரா பெற்றுள்ளது. ஆனாலும் மக்கள் தொடர்ந்து சமூக பரவலை கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.