மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக உரிய நடவடிக்கை: டெரிக் ஓ பிரையன்!
மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் தலைமை உரிய முடிவை எடுக்கும் என டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திரிணாமூல் காங்கிரஸ் மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக கட்சித் தலைமை உரிய முடிவெடுக்கும் என அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு, சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு, கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. அவர் ஏற்கனவே அதைச் செய்துள்ளார். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யின் உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் இது. இந்த விவகாரம் நாடாளுமன்றக் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்.” என்றார்.
மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து திரிணாமூல் காங்கிரஸ் மேலிடம் அமைதி காத்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் மேற்கு வங்க பொதுச்செயலாளருமான குணால் கோஷ், “இந்த விவகாரம் தொடர்பாக, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட சொல்லாது. நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. சம்பந்தப்பட்ட எம்.பி.யே பிரச்சினை குறித்து விளக்கம் அளிப்பார். இந்த விவகாரத்தை கவனித்து வருகிறோம். இப்போதைக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.” என்றார்.
அவரது இந்த கருத்து கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக, சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், டெரிக் ஓ பிரையன் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
மஹுவா மொய்த்ரா விவகாரம்: திரிணாமூல் அமைதி காப்பது ஏன்? பாஜக சரமாரி கேள்வி!
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அவர் அனுப்பிய புகார் கடிதத்தில், அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து நாடாளுமன்ற குழு விசாரணைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மஹுவா மொய்த்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.