மஹுவா மொய்த்ரா விவகாரம்: திரிணாமூல் அமைதி காப்பது ஏன்? பாஜக சரமாரி கேள்வி!
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் அக்கட்சி மேலிடம் அமைதி காப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அவஃப்ர் அனுப்பிய புகார் கடிதத்தில், அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையே, பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்ததை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புக் கொண்டார். மேலும், மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற இணையதள கணக்கின் முகவரியையும், அதன் கடவுச்சொல்லையும் தம்மிடம் பகிர்ந்ததாகவும் தர்ஷன் ஹிராநந்தானி தெரிவித்தார். இதற்கு பிரதிபலனாக மஹுவா மொய்த்ராவுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மஹுவா மொய்த்ரா, அதிகார அமைப்புகளை காட்டி தர்ஷன் ஹிராநந்தானியின் தொழிலை முடக்கி விடுவதாக பாஜகவினர் மிரட்டி இதுபோன்று சொல்லச் சொல்லியுள்ளதாக விளக்கம் அளித்தார்.
அதேசமயம், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் மேலிடம் அமைதி காத்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் மேற்கு வங்க பொதுச்செயலாளருமான குணால் கோஷ், “இந்த விவகாரம் தொடர்பாக, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட சொல்லாது. நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. சம்பந்தப்பட்ட எம்.பி.யே பிரச்சினை குறித்து விளக்கம் அளிப்பார். இந்த விவகாரத்தை கவனித்து வருகிறோம். இப்போதைக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.” என்றார்.
சியாச்சினில் அக்னிவீர் மரணம்: இந்திய ராணுவம் மரியாதை!
ஆனால், இதனை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது, “மஹுவா மொய்த்ரா மீதான திரிணாமூல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம் என்பது. குற்றம் சாட்டப்பட்ட எம்பி தன்னை தானே தற்காத்துக் கொள்வார் என்கின்றனர். கார்ப்பரேட் நிறுவனத்தால் வெளிநாட்டு மண்ணில் இருந்து இயக்கப்படுவதற்கு தனது இணைய முகவரியையும், கடவுச்சொல்லையும் கொடுத்து கடுமையான மீறல்களைச் செய்ததை திரிணாமூல் ஏற்றுக் கொள்கிறதா? அவரை பதவி நீக்கம் செய்யாமல் திரிணாமூல் காங்கிரஸ் ஏன் இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.?” என பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூன்வாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, மம்தா பானர்ஜி, மஹுவா மொய்த்ராவை கைவிட்டதில் ஆச்சரியமில்லை என்று பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் மேற்குவங்க இணை பொறுப்பாளருமான அமித் மால்வியா கூறியிருந்தார். “அபிஷேக் பானர்ஜியை தவிர மம்தா பானர்ஜி வேறு யாரையும் காக்க மாட்டார். அவர் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. பல திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிறையில் உள்ளனர். ஆனால் மம்தா பானர்ஜி தீவிர மவுனம் காத்து வருகிறார்.” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.