சியாச்சினில் பணியின் போது உயிரிழந்த அக்னிவீரருக்கு இந்திய ராணுவம் மரியாதை செலுத்தியுள்ளது

சியாச்சினில் பணியின் போது அக்னிவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லே-யை தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் Fire and Fury படைப்பிரிவு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்த அக்னிவீரரின் பெயர் கவாட் அக்‌ஷய் லக்ஷ்மண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே மற்றும் அனைத்துப் படை வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காரகோரம் மலைத்தொடரில் சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிப்பாறை உலகின் மிக உயர்ந்த ராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாக அறியப்படுகிறது, அங்கு வீரர்கள் உறைபனி மற்றும் அதிக காற்றுடன் போராட வேண்டியதிருக்கும். ராணுவ வீரர்களுக்கு சவால் நிறைந்த பணியிடமாக இது கருதப்படுகிறது.

அக்னிவீர் கவாட் அக்‌ஷய் லக்ஷ்மணனின் மரணம் குறித்த சரியான விவரம் உடனடியாக தெரியவில்லை. எப்படி உயிரிழந்தார் என்பன போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இதுகுறித்து Fire and Fury படைப்பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில், “கடமையின் வரிசையில், அக்னிவீர் ஆபரேட்டர் கவாட் அக்‌ஷய் லக்ஷ்மணனின் உச்சபட்ச தியாகத்திற்கு ஃபயர் அண்ட் ஃபியூரி கார்ப்ஸின் அனைத்துத் தரப்புகளும் மரியாதை செலுத்துகின்றன. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என பதிவிட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கு அக்னிபத் எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்றுவார்கள்.

Scroll to load tweet…

மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டங்களும் நடந்துள்ளன. முன்னதாக, உயிரிழக்கும் அக்னிவீரர்கள் சரியாக மரியாதை செய்யப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அகவிலைப்படி கணக்கீடு செய்வது எப்படி? மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு டி.ஏ. கிடைக்கும்!