transport rules

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து காயம் ஏற்பட்டாலோ அல்லது உயிரிழப்பு ஏற்படுத்தினாலோ, ஒட்டுமொத்த இழப்பீட்டு தொகையையும் டிரைவரே தர வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தராது என்ற மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் புதிய மசோதாவை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மசோதாவை அறிமுகம் செய்து மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், “ இந்த சட்டத்திருத்தத்தின் நோக்கம் விபத்துக்களை குறைக்க வேண்டும் என்பதுதான். மேலும், விபத்து ஏற்படுத்தினால், கடுமையான அபராதமும், சிறைவாசம், ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்து வைத்தல் போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் சிறுவர்கள் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது, அதிவேகமாகச் செல்வது போன்றவற்றுக்கு அபராதம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. டாக்சி ஓட்டுநர்களை நெறிப்படுத்தவும் இந்த சட்டத்தில் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்களை பதிவு செய்யும் போது, போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து பதிவு செய்தால் வாகனத்தின் உரிமையாளருக்கும், டீலருக்கும்தலா ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படுத்தி அதனால், சாலையை பராமரிக்க ஆகும் செலவாக ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகை மோட்டார் வாகன விபத்து நிதியில் சேர்க்கப்படும் என்று தெரிவத்தார்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால்தான் விபத்து ஏற்படுகிறது. அவ்வாறு விபத்து ஏற்படுத்தினால், கவனக்குறைவு என்ற ரீதியில் அபராதத்துடன் விட்டுவிடாமல், இந்திய குற்றவியல் சட்டம் 299 பிரிவின்படி, உள்நோக்கத்துடன், தெரிந்த குற்றம் செய்தார் என்ற பிரிவில் அவரை கைது செய்து அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில முக்கியமான பரிந்துரைகளையும் அளித்துள்ளளது. அவை

1. போக்குவரத்து விதிகளை மீறும் குற்றங்களுக்கு அபராதத்தை ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்துதல்.

2. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம், மேலும் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் வழக்கு மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம்.

3. வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல், மாணவர்கள் பைக், கார் ஓட்டி பிடிபட்டால், அந்த வாகனத்தின் உரிமம்,பதிவு உடனடியாக ரத்து செய்யப்படும். வாகனத்தின் உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம், ரூ. 25 ஆயிரம் வரை அபராதம்,3 ஆண்டுகள் சிறை. சிறுவர்களை சிறார் நீதிச்சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை

4. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்று பிடிபட்டால் ரூ.ஆயிரம் அபராதமும், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்படும்.

4. மேலும், சிக்னலில் சிவப்பு விளக்கை மீறிச் செல்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கும் ரூ. ஆயிரம் முதல் ரூ.1500 அபராதம் விதிக்கப்படும்.

5. இருசக்கர வாகனம், கார் ஓட்டும் போது செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டினால், ரூ. ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம்.