மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னாவில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர். இன்று காலை 6 மணியளவில் அவுரங்கபாத் அருகே இருக்கும் ஒரு தண்டவாளத்தில் அவர்கள் தூங்கி ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவுரங்கபாத் ரயில் நிலையத்தில் இருந்த வந்த சரக்கு ரயில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவலர்கள் உயிருக்கு போராடியவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு நடந்து சென்ற தொழிலாளர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.