நாடு முழுவதும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் உயர இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ரயில்வே நிர்வாகத்தில் வருவாய் குறைந்து வரும் காரணத்தால் பயணிகள் டிக்கெட் கட்டணத்தையும் சரக்கு ரயில் கட்டணத்தை முறைப்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறார். கட்டண உயர்வு என்பது உணர்வுபூர்வமானது விவகாரம் என்பதால் நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் சரக்கு ரயில் கட்டணம் ஏற்கனவே அதிகமாக இருப்பதையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றார். சாலை போக்குவரத்தில் இருந்து ரயில் போக்குவரத்திற்கு மக்களை அதிகளவில் கொண்டுவருவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வி.கே யாதவ், ரயில் கட்டணம் உயர இருக்கிறதா? என்பதற்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். கடுமையான நிதி இழப்பில் இருக்கும் ரயில்வே நிர்வாகம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த நிதியாண்டில் அதிக இழப்பை சந்தித்து இருக்கிறது.

இதுவரையிலும் ரயில்வே ஊழியர்களை ரயில்வே வாரியமே தேர்வுகள் நடத்தி தேர்வு செய்து வந்தது. இனி மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலமாக ரயில்வே பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அதன் மூலம் ரயில்வேக்கு 5 பிரிவுகளில் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவற்றில் சிவில், மெக்கானிக்கல், தொலைதொடர்பு, எலக்ட்ரிகல் ஆகிய நான்கும் இன்ஜினியரிங் தொழில்நுட்பம் சார்ந்தது. கணக்கு, போக்குவரத்து மற்றும் இதர பணியாளர்கள் மட்டும் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.