தால் ஏரியில் பலத்த காற்று வீசியதால் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலா பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். உள்ளூர்வாசிகள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஏப்ரல் மாதமும் இதேபோல் ஒரு விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் தால் ஏரி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஶ்ரீநகரில் அமைந்துள்ளது தால் ஏரி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும், இந்த ஏரி மீன்பிடித்தல் போன்ற வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த தால் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வார்கள். அந்த வகையில் தால் ஏரியில் படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தால் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கினர்.

தால் ஏரி விபத்து- சுற்றுலா பயணிகள் தண்ணீரில் தவிப்பு
தால் ஏரியில் பலத்த காற்று வீசியதால் சுற்றுலாப் படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த பல சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில் விழுந்தனர். பலத்த காற்றின் போது படகு ஏரியின் நடுவில் கவிழ்ந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. படகில் இருந்து விழுந்த சுற்றுலா பயணிகள் தண்ணீரில் தத்தளிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் கரையோரங்களில் உள்ள மக்கள் கூச்சலிடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து உள்ளூர்வாசிகள் மற்றும் காவல்துறையினரால் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கினர். விபத்து நடந்த நேரத்தில் படகில் இருந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. தந்தை மற்றும் மகன் தண்ணீரில் விழுந்து தவித்த நிலையில் தந்தை மட்டும் மீட்கப்பட்டார், மகனின் நிலை தற்போதுவரை தெரியவில்லை
தால் ஏரியில் தொடரும் விபத்துகள்.?
இதனிடையே கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியும் இதே போன்று விபத்து ஒன்று தால் ஏரியில் நடைபெற்றுள்ளது. அப்போது திடீர் காற்று மற்றும் மழையால் ஒரு ஷிகாரா படகு கவிழ்ந்தது. இந்த படகில் ராஜஸ்தானில் இருந்து வந்த சுற்றுலா குடும்பம் மற்றும் ஒரு படகோட்டி உட்பட நால்வர் பயணித்தனர். அவர்கள் நீரில் விழுந்து, உதவிக்காக கத்தினர். அப்போது அருகில் இருந்த உள்ளூர் படகோட்டிகள் விரைந்து செயல்பட்டு, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.


