தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில், ஒரு கிராமமே தினந்தோறும் காலையில் தேசிய கீதத்தை பாடி வருகிறது. குற்றங்களைத் தடுக்க போலீஸ்காரர் ஒருவரின் முயற்சியால் இந்த அற்புதகாட்சி நாள்தோறும் அரங்கேறுகிறது.

தேசிய கீதம் பாடப்படும் போது, சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனம், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள்  அனைவரும் நின்று தேசிய கீதத்தை பாடிவிட்டு செல்கின்றனர்.

கரீம்நகர் மாவட்டம், ஜம்மி குண்டா கிராமத்தில் தினமும் காலை 7.54 மணிக்கு தேசிய கீதம் ஒற்றுமையாக அங்குள்ள மக்களால் பாடப்பட்டு வருகிறது. கடந்த சுதந்திர தினம் முதல், ஜம்மிகுண்டா கிராமம் முழுவதும் சரியாக காலை 7.54 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கிறது.

அப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும் சாதாரண பொதுமக்கள் உட்பட அனைவரும் 52 நொடிகள் வரை ஒலிபரப்பாகும் தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர். இது தற்போது அந்த கிராமத்தின் சுற்றுப்பகுதிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து ஜம்மிகுண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:

 நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் சினிமா தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் ஒளிபரப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை முன்னோடியாக கொண்டு நான் எனது கட்டுப்பாட்டில் வரும் ஜம்மிகுண்டாகிராமத்தில் தினமும் தேசிய கீதத்தை ஒலிபரப்ப முடிவு செய்தேன்.

சரியாக காலை 7.58 நிமிடத்துக்கு தேசிய கீதம் ஒலிபரப்புவது குறித்து அறிவிப்புகள் வெளியாகும். அதன் பின்னர் சரியாக காலை 8 மணிக்கு தேசிய கீதம் 52 நொடிகள் ஒலிபரப்பாகும். தற்போது அனைவரும் தேச பக்தியுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

குற்றங்களைத் தடுக்கும் முக்கிய கருவியாக தேசிய கீதம் இருந்து வருகிறது. காலையில் குற்றம் செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் வீட்டை விட்டு புறப்படுபவர்கள் கூட தேசிய கீதத்தைக் கேட்டால், ஒரு நிமிடத்தில் அவரின் மனநிலை மாறிவிடும்.

பஸ்லில் ெசல்பவர்கள் கூட நிறுத்திவி்ட்டு கீழே இறங்கி, தேசியகீதம் பாடிவிட்டு, வணக்கம் செலுத்தி செல்கிறார்கள், இதை மக்கள் தானாக முன்வந்து செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.