மணிப்பூரில் விடிய விடிய நடந்த சண்டை! 3 பேர் சுட்டுக்கொலை... ஒருவர் தலை துண்டிப்பு
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் தலையைத் துண்டித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக நீடித்துவரும் நிலையில் மோதலின் ஞாயிற்றுக்கிழமை மூண்ட புதிய வன்முறையில் 4 பேர் பலியாகியுள்ளனர். போராட்டக் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலையைத் துண்டித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
பிஷ்ணுபூர்-சுராசந்த்பூர் எல்லையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இம்பாலில் இருந்து தென்கிழக்கே 70 கிமீ தொலைவில் இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர். ஐந்து கிராமவாசிகள் வன்முறையாளர்களால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
முதல்வர் என் பிரேன் சிங், கும்பி சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்துள்ளார். அப்போது, பாதுகாப்பு குறைபாடுகள் சரி செய்யப்படும் என்று மக்களுக்கு உறுதி அளித்தார்.
மணிப்பூரில் உள்ள பிஷ்ணுபூர் மாவட்ட நிர்வாகம் அங்குள்ள ஊரடங்கு உத்தரவு தளர்வு காலத்தை 12 மணிநேரத்திற்குப் பதிலாக ஐந்து மணிநேரமாகக் குறைத்தது. காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை உத்தரவு தளர்வு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறையில் சீனா ஈடுபட்டுள்ளது.. சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் சொன்ன பகீர் தகவல்
இதனிடையே கடந்த வாரம் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். பின்னர் தன் மனதை மாற்றிக்கொண்ட பிரேன் சிங் பொதுமக்கள் தன் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கருதி ராஜினாமா செய்ய எண்ணியதாவும், ஆனால் மக்கள் ஆதரவு காட்டியதால் ராஜினாமா செய்வதை மறுபரிசீலனை செய்ததாகவும் கூறினார்.
மே 3 ம் தேதி மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்ததில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 40,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மெய்தி சமூகத்தினர் பள்ளத்தாக்கு பகுதியில் வாழ்கின்றனர். குக்கிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
இந்நிலையில், மெய்தி சமூக மக்கள் தங்களுக்கு பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இது தொடர்பான வழக்கில், மெய்தி சமூகத்தினரின் கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் எதிரொலியாக இரு சமூகத்தினரும் நடத்திய பேரணியில் இருந்து வன்முறைச் சம்பவங்கள் தொடங்கின.
பாஜகவின் பி-டீம் இவருதான்.. கே.சி.ஆரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமரிடம் இருக்கு - ராகுல் காந்தி ஆவேசம்