Asianet News TamilAsianet News Tamil

12 வயது சிறுவன் உள்பட 3 பேர் மாரடைப்பால் பலி: குஜராத்தில் சோகம்!

குஜராத் மாநிலத்தில் 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Three died of sudden heart attacks including 12 year old boy in gujarat smp
Author
First Published Sep 13, 2023, 3:41 PM IST

குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களில் முறையே 12 வயது சிறுவன், 25 வயதுக்குட்பட்ட இரண்டு இளைஞர்கள் என மொத்தம் 3 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக குஜராத் முழுவதும் ஆங்காங்கே மாரடைப்பால் ஏற்படும் மரணங்களின் பட்டியலில் இந்த மூவரும் இணைந்துள்ளனர்.

துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த 12 வயதான துஷ்யந்த் பிப்ரோதர் என்ற சிறுவன், அதிகாலை 5:30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுவனது பெற்றோர், அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தனது மகன் கொரோனா தடுப்பூசி போடவில்லை என உயிரிழந்த சிறுவனின் தந்தை கன்ஷியாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“துஷ்யந்தின் திடீர் மரணத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராமமும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம்.” என விஜாப்பூர் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார். கிராம மக்கள் அனைவரும் துஷ்யந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

ராஜ்கோட்டை சேர்ந்த  23 வயதான நிமித் சத்ரானி என்பவர் சாஸ்திரிநகர்-அஜ்மீரா பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்த போது நெஞ்சு வலியால் சரிந்து விழுந்துள்ளார். பல மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருந்த அவர், வங்கி ஒன்றில் நேர்முகத் தேர்வுக்காக சென்றதாக அவரது பெற்றோரும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

சாலையில் திடீரென மயங்கி விழுந்த அவரை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். வேலை தேடி வந்த நிலையில், லக்ஷ்மிவாடி பகுதியில் உள்ள தனது மாமா கடையில் துணி வியாபாரமும் நிமித் சத்ரானி செய்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர்.

புதிய வந்தே பாரத் ரயில்கள்: எந்தெந்த ரூட்டில் விட போறாங்க? தமிழ்நாடு லிஸ்ட்ல இருக்கா?

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நாங்கள் தற்செயலான மரணம் என்று வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவரது தந்தை எந்த விவரங்களையும் தெரிவிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். நிமித் சத்ரானிக்கு வங்கியில் இருந்து நேர்காணல் அழைப்பு வந்துள்ளது. ஆனால் வங்கியை சென்றடைவதற்கு முன்பே இறந்துவிட்டார்.” என தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ராஜ்கோட்டை சேர்ந்த 24 வயதான ஜாஸ்மின் வகாசியா என்பவர், கோகதாத் கிராமத்தில் உள்ள அவரது உறவினரின் தொழிற்சாலையில் உயிரிழந்துள்ளார். வழக்கம் போல், தொழிற்சாலைக்கு சென்று அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வந்த அவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். இதனை தற்செயலான மரணம் என பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios