கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். விஷு, மகர சங்கராந்தி, கார்த்திகை, மார்கழி மாதம் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் கோவில் நடை திறக்கப்படும்.

கார்த்திகை மாதம் 1ம் தேதியில் இருந்து சபரிமலையில் மண்டல காலம் தொடங்கும். அதற்காக ஐப்பசி கடைசி நாளில் நடை திறக்கப்படும். அதுமுதல் 41 நாட்களுக்கு சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி சுமந்து, காட்டு வழியில் நடந்து, பதினெட்டாம் படி ஏறி சுவாமியை தரிசனம் செய்வார்கள். 

மண்டல காலத்திற்கு பின்னர் மகர விளக்கு பூஜை தொடங்கப்பட்டு ஜனவரி 20 தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். மகர சங்கராந்தி நாளில் சுவாமி ஐயப்பன் சபரிமலையில் இருக்கும் பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நாளில் பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் பொன்னாபரணங்கள் சுவாமியின் விக்ரகத்திற்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதைக்கான லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள்.

இந்த காலங்களில் பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொள்வார்கள். பின்னர் இருமுடி கட்டி சபரிமலைக்கு காட்டு பாதையாக வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதுதொடர்பாக தமிழகத்தில் இருந்தும் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி, பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளார். ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும்போது நிலக்கல் அல்லது எருமேலி பகுதிகளுக்கு எந்தவகையான நெகிழிப் பொருள்களை கொண்டு செல்ல கூடாது என்று கூறியுள்ளார். பம்பை நதியில் துணிகளை விடுவதையும் தவிர்க்குமாறு தெரிவித்திருக்கிறார்.

இதற்காக இந்து அறநிலையத்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையாளர்கள் மூலம் ஐயப்ப குருசாமிகளை இணைத்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறையின் ஆணையாளர் பணீந்திரரெட்டி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10 பைசா நாணயத்திற்கு வந்தது யோகம்..! அடித்து பிடித்து தேடும் பொதுமக்கள்..!