பாரதம் எங்கள் பெருமிதம்: அழைப்பிதழை பகிர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
பாரத் என்ற பெயர் மாற்றம் முன்னதாகவே நடந்திருக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏரளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வரவுள்ளனர்.
ஜி20 மாநாட்டையொட்டி, செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரவு விருந்து நடைபெறவுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், பாரத ஜனாதிபதி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற அழைப்பிதழ்களில் ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் மத வேறுபாடு பார்ப்பதில்லை: மருத்துவர் கஃபீல் கான் நெகிழ்ச்சி!
இந்த பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜகவினர் இந்த பெயர் மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜி20 இரவு விருந்துக்கான அழைப்பிதழை தனது எக்ஸ் பக்கத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இது முன்னதாகவே நடந்திருக்க வேண்டும். இது மனதிற்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. 'பாரத்' எங்கள் அறிமுகம். நாங்கள். அதில் பெருமிதம் கொள்கிறோம். குடியரசுத் தலைவர் பாரதத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளார். இது காலனித்துவ மனநிலையில் இருந்து வெளிவரும் மிகப்பெரிய அறிக்கை.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் பெயரை “பாரத குடியரசு” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.