உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்கும்படி கேட்டு கொள்கிறேன்.
கொரோனா விதிகளைப் பின்பற்றி ஜனநாயகத்தின் இந்த புனிதமான திருவிழாவில் வாக்காளர் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. எப்படி இந்த முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல், இழந்த ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாதி கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்தும், அவருக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி களத்தில் இறங்கியுள்ளார். இந்த முறையாவது சரிந்து போன செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

இந்நிலையில், முதல்கட்டமாக மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், பாக்பத், காஜியாபாத், புலந்த்ஷார், அலிகார், மதுரா மற்றும் ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தனது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு போலீசாருடன் 50 ஆயிரம் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்கும்படி கேட்டு கொள்கிறேன். நினைவில் கொள்ளுங்கள். முதலில் வாக்களியுங்கள், பிறகு சிற்றுண்டி எடுத்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
