இது முதன்முறை அல்ல.. 2009-ம் ஆண்டிலும் இதே கோரமண்டல் ரயில் தடம் புரண்டது.. அந்த விபத்து பற்றி தெரியுமா?
நேற்று விபத்தில் சிக்கிய இதே கோரமண்டல் ரயில் பிப்ரவரி 13, 2009 அன்று ஒடிசாவில் விபத்துள்ளானது. துரதிர்ஷ்டவசமாக அந்த விபத்து நடந்ததும் வெள்ளிக்கிழமை தான்.
ஒடிசா அருகே நேற்று நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருக்கே நேற்று மூன்று ரயில்கள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழண்டனர், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து சமீப காலங்களில் மட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும்.
வெள்ளிக்கிழமை, சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோரில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே தடம் புரண்டு, ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தடம் புரண்ட ஹவுரா செல்லும் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. அப்போது தடம் புரண்ட கோரமண்டலின் பெட்டிகள் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12842) சென்னை மற்றும் ஷாலிமார் இடையே 1,662 கிமீ தூரத்தை 27 மணி 5 நிமிடங்களில் கடக்கிறது. வெள்ளிக்கிழமை நடந்த கோரவிபத்து 2009 கோரமண்டல் விபத்தில் சுமார் 16 பயணிகள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தியது. ஆம். இதே கோரமண்டல் ரயில் பிப்ரவரி 13, 2009 விபத்துள்ளானது. துரதிர்ஷ்டவசமாக அந்த விபத்து நடந்ததும் வெள்ளிக்கிழமை தான்.
2009 ஆம் ஆண்டு கோரமண்டல் ரயில் ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தை மிக அதிவேகத்தில் கடந்து சென்று தடம் மாறிக் கொண்டிருந்த போது விபத்து நடந்தது. ரயிலின் என்ஜின் ஒரு தண்டவாளத்தில் சென்று கவிழ்ந்த நிலையில் பெட்டிகள் நாலாபுறமும் சிதறியது. 2009 விபத்தும் மாலையில் நடந்தது. இரவு 7.30 முதல் 7.40 க்குள் நடந்த விபத்து தான்.
இதனிடையே மீட்புப் பணிக்குப் பிறகு, நேற்று நடந்த மூன்று ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 233 ஐ கடந்துள்ளது. மேலும் மேலும் உடல்கள் மீட்கப்படுவதால், பலி எண்ணிக்கை 300 ஐ எட்டலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒன்றன் பின் ஒன்றாக உரத்த சத்தம் கேட்டதாகவும், அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது, சுற்றிலும் சிதைந்த ரயில் பெட்டிகள் மற்றும் உடல்கள் மட்டுமே கிடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பேசிய போது "நாங்கள் திடுக்கிட்டோம், திடீரென்று ரயில் பெட்டி ஒரு பக்கம் திரும்புவதைப் பார்த்தோம். தடம் புரண்டதன் வேகத்தால் எங்களில் பலர் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டோம். நாங்கள் ஊர்ந்து செல்ல முடிந்ததும், நாங்கள் உடல்கள் முழுவதும் கிடப்பதைக் கண்டோம்," என்று தெரிவித்தார்.