ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என ஏராளமாக உண்டியலில் செலுத்துகின்றனர்.

பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. சலுகை விலையில் 2 லட்டுகள் 20 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கூடுதல் லட்டுகளுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு லட்டு செய்வதற்கே 40 ரூபாய் செலவாகுவதால் தேவஸ்தானத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. அதை ஈடுகட்டும் வகையில் லட்டின் விலையை அதிரடியாக உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதன்படி அனைத்து தரிசன பிரிவுகளுக்கும் ஒரு லட்டு இலவசமாகவும், கூடுதலாக வாங்கும் ஒவ்வொரு லட்டும் 50 ரூபாய்க்கு விற்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. இது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தேவஸ்தான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பன்மடங்கு விலை உயர்வால் பக்தர்கள் கொந்தளித்துள்ளனர். விலை உயர்வை தேவஸ்தானம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.