மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்: ஆக. 31 - செப்.1 இல் நடக்கிறது
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
மும்பையில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு சந்திப்பைப் போலவே ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் நாளில் தலைவர்களின் பொதுவான சந்திப்புகள் நடக்கும் என்றும் அடுத்த நாள் அனைத்து தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்றும் நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "எதிர்க்கட்சி கூட்டம் இரண்டு நாள் இருக்கும். ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடத்த அனைத்து தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்" என்று சொல்லப்படுகிறது.
மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்திற்குப் பின் செப்டம்பர் 1 மாலையில் செய்தியாளர் சந்திப்பு இருக்கும் என்றும் தெரிகிறது. முன்னதாக மும்பை கூட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகளில் அனைத்து தலைவர்களும் வரமுடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ஒத்திப்போனது.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் அங்கங்களான காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டத்தை நடத்துகின்றன. இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கடந்த மாதம் பெங்களூருவிலும் நடைபெற்றன.
மும்பை கூட்டத்தில் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தேர்தல் பிரச்சாரம் போன்ற நடவடிக்கைகளுக்கான குழுக்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான அலுவலகம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, கட்சிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை முடிந்தவரை களைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு கூட்டத்தில் கலந்துகொண்ட 26 கட்சிகளும் இந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. பெங்களூருவில் கூட்டணியின் பெயர் அறிவிக்கப்பட்டதைப் போல, மும்பையில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட இருப்பதாவும், குறைந்தபட்ச செயல்திட்டம் பற்றி விவாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த ராகுல் காந்தி.. விரைவில் காங்கிரசில் மாற்றமா?